திருச்சி: கருணாநிதி 2ம் ஆண்டு நினைவஞ்சலி
திருச்சி: திருச்சி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கரோனா களப்பணியில் முன்களப்ணியாளர்களாக பணியாற்றும் துய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி வழங்கப்பட்டது. இதேபோல, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரும் கெளரவிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், தில்லைநகரில் உள்ள கட்சியின் முதன்மைச் செயலர் அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படத்தை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், திருவெறும்பூர், உறையூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், உப்பிலியபுரம், துறையூர், தா.பேட்டை, மணிகண்டம், மருங்காபுரி, திருவரங்கம், முசிறி, சமயபுரம், லால்குடி என மாவட்டம் முழுவதும் அந்தந்த கட்சிக் கிளைகளின் சார்பில் கருணாநிதியின் உருவப்படம் திறந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.