திரையரங்குகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல்படி முடிவு: கடம்பூர் ராஜு பேட்டி

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கரோனா தாக்கம் குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100க்கும் கீழே உள்ளது. 

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட எட்டயபுரம் தாலுகா கடலையூரைச் சேர்ந்த 34 தியாகிகளுக்கு, அந்த ஊரிலேயே மக்கள் சார்பில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில்  அரசு சார்பில் மரியாதை செலுத்த  வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழக முதல்வர் இந்த மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார். அந்தக் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வழங்க உள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை, முதல்வர் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

செப்.1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு ஆலோசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் கரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com