பொங்கலுக்குத் தயாராகும் பனங்கிழங்குகள்!

பொங்கல் திருநாளையொட்டு பனகிழங்கு அறுவடை முனைப்பாக நடைபெற்று வருகிறது. 
பொங்கலுக்குத் தயாராகும் பனங்கிழங்குகள்!

பொங்கல் திருநாளையொட்டு பனகிழங்கு அறுவடை முனைப்பாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன்வடமலாபுரத்தில் வைப்பாற்றின் கரையோரம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பனங்கிழங்குகளை பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிகழாண்டு நல்ல மழை பெய்ததால் பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அயன் ராசாப்பட்டி தொடங்கி வைப்பாறு கடற்கரை கிராமம் வரை 40 கி.மீ. தொலைவுக்கு வைப்பாறு நதித்தடம் உள்ளது. இதில் வைப்பாற்றின் கரையோரமுள்ள மணற்பாங்கான இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. குறிப்பாக எட்டயபுரம் வட்டத்தில் கீழ்நாட்டுக்குறிச்சி, சக்கிலிபட்டி முத்தலாபுரம், தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், வேடபட்டி, விருசம்பட்டி, நம்பிபுரம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்புக்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பனைச் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது.

இப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பனங்கிழங்கு சாகுபடி செய்து விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பனை மரத்திலிருந்து விழக்கூடிய பனம்பழ கொட்டைகளை சேகரித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் குறுமணல் நிறைந்த மணற்பாங்கான நிலத்தில் புதைத்து நீர் பாய்ச்சி 3 மாத காலத்திற்கு பின் பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம். நிகழாண்டு நல்ல மழை பெய்திருப்பதால் சாகுபடி செய்யப்பட்ட பனை விதைகள் நல்ல விளைச்சல் கொடுத்து ஒவ்வொரு பனங்கிழங்கும் 2 அடி நீளத்துக்கு நல்ல திரட்சியுடன் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பொங்கலுக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் அயன்வடமலாபுரத்தில் பனங்கிழங்குகள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக கோவில்பட்டி, திருநெல்வேலி, விருதுநகர், ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னையிலிருந்தும் வியாபாரிகள் நேரிடையாக தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வந்து தரம் வாரியாக பிரித்து ஒரு பனங்கிழங்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரையும், 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து வாங்கி செல்கின்றனர்.

மேலும் சாலையோர வியாபாரத்தில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகளும் விரும்பி வாங்கி செல்வதினால் பனங்கிழங்கு வியாபாரம் களை கட்டியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு பனங்கிழங்கு விற்பனையில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com