வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: ஆடிப்பட்டத்தில் விதையிடும் பணி தொடக்கம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆடி அமாவாசை தினத்தில் இருந்து விவசாயிகள் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன்நகரில் ஆடி அமாவாசை தினத்தில், மக்காச்சோளம் விதைத்து ஆடிப்பட்டச் சாகுபடியை தொடங்கிய விவசாயி கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள்.
வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன்நகரில் ஆடி அமாவாசை தினத்தில், மக்காச்சோளம் விதைத்து ஆடிப்பட்டச் சாகுபடியை தொடங்கிய விவசாயி கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள்.
Updated on
1 min read


வாழப்பாடி:  சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆடி அமாவாசை தினத்தில் இருந்து விவசாயிகள் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், வானம் பார்த்த பூமிகளான  புஞ்செய் நிலங்களில், பருவமழை மற்றும் கோடை மழையை நம்பி, குறுகிய கால மானாவரி பயிர்களான  கம்பு, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

கம்பு, சோளம், மக்காச்சோள தானிய கதிர் பூ தட்டைகளை அறுவடை செய்து கொள்ளும் விவசாயிகள், எஞ்சிய தட்டையை பதப்படுத்தி வைத்து கொண்டு, கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.

கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழுது பயிரிடுவதற்கு  தயார்படுத்தி வைத்திருக்கும் விவசாயிகள், வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் ஏறக்குறைய ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு மூன்று மாத குறுகிய கால தானியப்பயிரான மக்காச்சோளத்தை விரும்பி பயிரிட்டு வருகின்றனர். 

அறுவடை தருணத்தில் விலை வீழ்ச்சியடைந்தால், கதிர்களை அறுவடை செய்யாமல் ஒரு மாதம் வரை வயலிலேயே முதிர வைத்திருந்து, மக்காச்சோளத்தை தனியாக உதிர்த்து,  மாட்டு தீவனம் மற்றும் எரிசாராயம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது ஆடிப்பட்டம் தொடங்கியுள்ள நிலையில், நிலத்தை உழுது தயார்படுத்தி பயிரிடுவதற்கு காத்திருந்த விவசாயிகள் எதிர்பார்த்தபடி கடந்த இரு தினங்களாக வாழப்பாடி பகுதி கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி, மானாவரி விளைநிலங்களில் மக்காச்சோளம் பயிரிடும் பணியில் விவசாயிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர்.

ஆடி அமாவாசை பயிர் செய்வதற்கேற்ற மங்களகரமான நாள் என்பதால், ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் விதைக்கும் பணி தொடங்கி முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வாழப்பாடி செல்லியம்மன்நகரைச் சேர்ந்த விவசாயி கார்த்திக் (45) கூறியதாவது:
பாசன வசதியில்லாத புஞ்செய் நிலத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறேன். இந்தாண்டு, கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழுது தயார்படுத்தி வைத்திருந்த தருணத்தில், எதிர்பார்த்ததைப்போலவே பரவலாக மழை பெய்தது.  ஆடி அமாவாசை தினத்தில் இருந்து தொடங்கி, கூலித்தொழிலாளர்களுடன், குடும்பத்தினரும் இணைந்து ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் பணியை தொடர்ந்து வருகிறோம். இந்தாண்டு பருவமழை கைகொடுத்து, படைபுழுக்கள் தாக்கம் குறைந்தால், போதிய வருவாய் கிடைக்கும் என்றார்.

வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன்நகரில் ஆடி அமாவாசை தினத்தில், மக்காச்சோளம் விதைத்து ஆடிப்பட்டச் சாகுபடியை தொடங்கிய விவசாயி கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com