வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

காரைக்காலில் பக்தர்களை அனுமதிக்க தயார் நிலையில் வழிபாட்டுத் தலங்கள்

காரைக்கால் மாவட்டத்தில் 8-ஆம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க ஏதுவாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் தயார் நிலையில் உள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:45 pm

DIN

காரைக்கால்:  காரைக்கால் மாவட்டத்தில் 8-ஆம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க ஏதுவாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

படிப்படியாக பொதுமுடக்கத் தளர்வுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களை 8-ஆம் தேதி முதல் திறக்க அனுமதித்ததோடு, பக்தர்கள் அனுமதிப்பில் விதிமுறைகளையும் அளித்தது.

புதுச்சேரி மாநிலத்தில், மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி 8-ஆம் தேதி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு செய்தது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றில், அரசின் வழிகாட்டல்களின்படி பல்வேறு முன்னேற்பாடுகள் கடந்த சில நாள்களாக மேற்கொள்ளப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், சமாதானக் குழுவினர் உள்ளிட்டோரை சனிக்கிழமை அழைத்து, பக்தர்களை வழிபாட்டுத் தலங்களில் எவ்வாறு அனுமதிக்கவேண்டும், தலங்களில் பூஜை முறைகள், பிரசாதம் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றை விளக்கி, நிர்வாகத்தினர் முழுமையாக ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Story image

இதன்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களை 8-ஆம் தேதி அனுமதிக்க ஏதுவாக தயார்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தலமாகும். கோவில் ராஜகோபுரத்துக்கு முன்பாக சமூக இடைவெளிக்கான வட்டங்களும், கோவில் உள்ளே பக்தர்கள் வரிசையாக சமூக இடைவெளியுடன் சன்னிதிக்குச்  செல்ல கோடுகளும் போடப்பட்டுள்ளன. கோவில் வாயிலில் கை கழுவுவதற்கான வசதி, தானியங்கி கிருமி நாசினி தரும் சாதனம் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக வழிபாட்டுத் தலங்கள் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுபோல அனைத்து கோவில்களிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவில்களின் வாயிலில் பக்தர்கள் நடந்துகொள்ளவேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல், கோவிலின் உள்ள பூஜை மற்றும் பிரசாதம் விநியோகமின்மை போன்ற தகவல்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

திருநள்ளாறு கோவில் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு திறப்பு செய்யப்படவுள்ளதாகவும், பகல் 12 மணிக்கு மூடப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும், அர்த்தஜாம பூஜை செய்து இரவு 8 மணிக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு முடிவு எடுக்கப்படாததால், புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியங்களில் திறப்பு செய்யப்படும் நிலையில், தமிழகப் பகுதியிலிருந்து அதிகமான மக்கள் காரைக்கால் பிராந்தியத்துக்கு வரக்கூடும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோர் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருப்பதோடு, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கோயில் வாயிலில் கை, கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லவேண்டும். இந்த செயல்பாடுகள் மீது அந்தந்த வழிபாட்டு நிர்வாகத்தினர் கவனம் கொள்ளவேண்டும் என அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் திங்கள்கிழமை பக்தர்களை அனுமதிக்கும் வகையில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக நீடித்துவருவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.