ஆச்சாள்புரத்தில் எளிமையாக நடந்தது திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா சனிக்கிழமை நள்ளிரவு எளிமையாக  நடைபெற்றது.
ஆச்சாள்புரத்தில் எளிமையாக நடந்தது திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா சனிக்கிழமை நள்ளிரவு எளிமையாக  நடைபெற்றது. எளிமையாக நடந்த இவ்விழாவில் சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். 

கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருவெண்ணீற்றுயம்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சன்னிதியில் திருமணக் கோலத்தில் திருஞானசம்பந்த பெருமான் தோத்திரபூர்ணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார். 

முன்னொரு காலத்தில் திருநல்லூர் நம்பியாண்டார் நம்பியின் மகள் ஸ்தோத்திர பூர்ணாம்பிகையை திருஞானசம்பந்தருக்கு மணம் முடித்து வைக்க ஏற்பாடு நடந்தது. அதன்படி வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று திருமணம் சிவாலயத்தில் வைத்து நடந்தது. அப்போது, சம்பந்தர் அக்னியை வலம் வந்தபோது இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை என்ற கல்லூர்ப்பெருமணம் எனத்தொடங்கும் பதிகம்பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு ஈசனை வழிபட்டார். 

அப்போது அங்கு அசரீரி யாவருக்கும் கேட்கும் வண்ணம் ஒலித்தது. அதில் கருவறையில் பெருஞ்ஜோதி தோன்றும் அந்த ஜோதியில் யாம் ஒரு திருவாயிலை அமைத்திருப்போம். அந்த வாசலின் வழியே நீயும், உம் திருமணம் காணவந்த அனைவரும் மற்றும் அடியவர்களும் சிவஜோதியில் புகுந்து எம்முள் கலந்திடுக என்றது. அப்போது தோன்றிய சிவஜோதியை கண்டு சிலர் தயக்கமும், அச்சமும் கொள்ள திருஞானசம்பந்தர் நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி எனும் திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் சிவஜோதியில் புகுமாறு கூறி அனைவரும் சிவஜோதி ஆகினர்.

திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் முக்தி வழங்கியதால் இத்தலத்து ஈசனுக்கு சிவலோகதியாகேசர் என்னும் திருநாமம் வந்தது. சம்பந்தர் திருமணம் காணவந்த அனைவருக்கும் உமையவள் அங்கு தோன்றி திருநீறு அளித்ததால் திருவெண்ணீற்றுயம்மை என அம்பாள் அழைக்கப்படுகிறார்.  இதையொட்டி, ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு பொது முடக்கத்தால் பக்தர்கள் யாரும் அனுமதியின்றி எளிமையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு திருமண சடங்குகள் நடந்தன.

பின்னர் சிவாச்சாரியர்கள் திருமாங்கல்யத்தை அணிவித்து திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நடந்தது. பின்னர் திருஞானசம்பந்தர், தோத்திரபூர்ணாம்பிகைக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவஜோதி தரிசனம் நடந்தது. 

எளிமையாக நடந்த இவ்விழாவில் சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவ்வூர் பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே விடிய, விடிய கண் விழித்து வழிபாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com