இந்திய ரயில்வேயின் அபாய அறிவிப்பு: 30 பயணிகள் ரயில்களை இழக்கிறது தமிழகம் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு மூலம் தமிழகம் 30 பயணிகள் ரயில்களை இழக்க உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் அபாய அறிவிப்பு: 30 பயணிகள் ரயில்களை இழக்கிறது தமிழகம் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
Published on
Updated on
1 min read


மதுரை: இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு மூலம் தமிழகம் 30 பயணிகள் ரயில்களை இழக்க உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே வாரியம் புதன்கிழமை (ஜூன் 17) ஒரு உத்தரவினை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வேக்களில் இயங்கும் 508 பயணிகள் ரயிலை விரைவு வண்டிகளாக மாற்றி ஜூன் 19- க்குள், அதாவது வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்குள் முடிவெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ரயில்வேக்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 200 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரயில்களின் நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு, கட்டணங்கள் இரண்டு மடங்கு அதிகரிப்பட்டு விரைவு ரயில்களாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் 34 இணை ரயில்கள் அடங்கும். அதில் தமிழகத்தின் 30 ரயில்களும் கேரளத்தின் 4 ரயில்களும் அடங்கும்.

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கும், புதுவையிலிருந்து திருப்பதிக்கும், விழுப்புரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், மதுரையிலிருந்து கொல்லத்துக்கும், கோவையிலிருந்து கண்ணனூருக்கும் இயங்கிக்கொண்டிருக்கும் பயணிகள் ரயில்களும் இதில் அடங்கும். விரைவு வண்டிகளாக மாற்றப்படுவதால் பல ஊர்களில் ரயில்கள் நிற்காது, இதன் மூலம் நகரங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிற்றூர்கள் பெரும் பாதிப்பினை சந்திக்கும். வணிகத்துக்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், கட்டணம் இரு மடங்கு அதிகப்படுத்தப்படும்.  அதுவும் 48 மணி நேரத்தில் இதற்கான நடவடிக்கை எடுத்து அமுல் படுத்த உத்தரவிட்டுள்ளது.

மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு பயணிகள் ரயிலும் மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் பல போராட்டங்களை நடத்தி பெறப்பட்டதாகும். அவை அனைத்தையும் ஒரே உத்தரவில் கிழித்தெறியும் ரயில்வே வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக எனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். அனைத்துப்பகுதி மக்களுக்கு எதிரான இந்த உத்தரவினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனக்கோருகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com