

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், ஏத்தாப்பூர் எஸ்.ஐ, புது மணப்பெண், பிரசவித்த பெண் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
ஏத்தாப்பூரில் காவலர் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானதையடுத்து, காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட 24 பேருக்கும், ஆரியபாளையம் வட்டார சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து, கரோனா பரிசோதனைக்காக புதன்கிழமை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 23 காவல்துறையினருக்கு கரோனா தொற்று இல்லையென வியாழக்கிழமை தெரியவந்தது. வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் பணியாற்றிய 52 வயது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, இவர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவருக்கும், தும்பல் மாமாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், கடலூர் பகுதியில் இருந்து தும்பல் மாமாஞ்சி கிராமத்திற்கு மணக்கோலத்தில் வந்த புதுமணத்தம்பதி மற்றும் உறவினர்களுக்கு தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில், புதன்கிழமை மாலை சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், புதுப்பெண்விற்கும், இவரது உறவினர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, திருமணம் செய்து கொண்ட இவரது கணவர் மற்றும் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, கடந்த வாரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிறந்த வீட்டிலிருந்து புதன்கிழமை கணவர் வீட்டிற்கு திரும்பிய பிரசவித்த பெண்ணுக்கு, தலைவாசல் சுங்கச்சாவடி மையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் இவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து, தாயும் சேயும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தும்பல் பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கும் புதன்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதியானது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுமணப்பெண், பிரசவித்த பெண், முதியவர் மூவரும் சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.