இலவச உணவு: தினமும் 200 பேரின் பசி போக்கும் ஹோட்டல் உரிமையாளர்  

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற சான்றோர் வாக்கை நிருபிக்கும் விதத்தில் ஆதரவற்றோர், நடைபாதைவாசிகள் 200 பேருக்கு இலவச உணவு
இலவச உணவு: தினமும் 200 பேரின் பசி போக்கும் ஹோட்டல் உரிமையாளர்  

ஈரோடு: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற சான்றோர் வாக்கை நிருபிக்கும் விதத்தில் ஆதரவற்றோர், நடைபாதைவாசிகள் 200 பேருக்கு இலவச உணவு வழங்கும் மகத்தான பணியை செய்து வருகிறார் ஈரோட்டை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றோர் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் ஆதரவற்றோருக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இடையான்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ். பொறியியல் பட்டதாரியான இவர், அப்பு ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டல் வைத்துள்ளார்.

இவர் தன்னார்வலர்கள் மூலம் ஈரோட்டில் உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணியை கடந்த 25 ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மதியம், இரவு உணவை இலவசமாக வழங்கும் பணியை செய்து வருகிறோம். மதியம் தக்காளி, தயிர், எலுமிச்சை போன்ற சாதம், இரவு சப்பாத்தி மற்றும் புரோட்டோ போன்றவற்றை பார்சல் செய்து கொடுத்து வருகிறேன்.

தினமும் 200 பேருக்கு அளிக்கப்படும் இந்த உணவை தயாரிக்க ரூ.7,000 வரை செலவாகிறது. நண்பர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் இந்த பணியை செய்து வருகிறேன். ஆதரவற்றோருக்கு தேடிச்சென்று உணவு அளிக்கும் பணியை செய்து வரும் தன்னார்வ அமைப்புகள் மூலம் உணவு விநியோகத்தை செய்து வருகிறேன்.

ஹோட்டல் வேலை செய்த பணியாளர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பிவிட்ட நிலையில் பெற்றோருடன் இணைந்து உணவு தயாரிப்பு, பார்சல் போன்ற பணிகளை செய்து வருகிறேன். உணவு தயாரிப்பு பணி,  தினமும் ரூ.7,000 வரை செலவு என்பது என்னைப் பொறுத்தவரை சிரமம் தான். நண்பர்கள் உதவியினால் இப்பணி சாத்தியமாகியுள்ளது.  வரும் 14 ஆம் தேதி வரை இப்பணியை தொடர இருக்கிறேன் என்றார் சக்தி விக்னேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com