வேலூரில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா: பாதிப்பு 12 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா: பாதிப்பு 12 ஆக உயர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் ஆர்.என்.பாளைத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யயப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பர்னீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த 49 வயது பாதிரியார் ஒருவருக்கு முதன்முதலாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதன்தொடர்ச்சியாக, தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் அமைப்பு மாநாட்டுக்குச் சென்று வந்ததாக மாவட்டம் முழுவதும் 29 பேர் அடையாளம் காணப்பட்டு வேலூரில் உள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதில், 5 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதியானது. அவர்களுக்கும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து, தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக ஏற்கெனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இவர்களும் ஏற்கெனவே வேலூர் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், வேலூர் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் வீடுகள் உள்ள பகுதி ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியையொட்டி 5 கி.மீ சுற்றளவுக்கு வீடுகளில் உள்ளவர்களின் உடல்நிலையை சுகாதாரக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com