புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 481 பேருக்கு கரோனா: 5 பேர் பலி
By DIN | Published On : 12th August 2020 12:31 PM | Last Updated : 12th August 2020 12:31 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
புதுச்சேரி : புதுவையில் புதன்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக 481 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
புதுவையில் 413 பேர், ஏனாமில் 67 பேர், மாஹேவில் ஒருவர் என 481 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 141 நாட்களில் தற்போதுதான் அதிகபட்ச பாதிப்பாகும். மேலும், இந்திரா காந்தி காந்தி மருத்துவ கல்லூரியில் 3 பேர், ஜிப்மரில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 6,381 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,669 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குறிப்பாக புதன்கிழமை 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய பகுதிகளில் 2,616 சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 621 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. கடந்த 4 நாள்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மாலையில் முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக முடிவு செய்து அறிவிப்பார் என்றார் அவர்.