மானாமதுரை டி.எஸ்.பி இடமாறுதல் : பணியிடத்தை நிரப்ப கோரிக்கை
By DIN | Published On : 12th August 2020 12:48 PM | Last Updated : 12th August 2020 12:48 PM | அ+அ அ- |

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம்
மானாமதுரை - சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணைக் கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் இடமாறுதல் செய்யப்பட்டதையடுத்து தற்போது அந்த பணியிடத்துக்கு புதிய துணைக் காவல் கண்காணிப்பாளரை விரைந்து நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, பழையனூர் ஆகிய 6 காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கும் காவல் நிலையங்கள் துறை ரீதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இக்கோட்டத்தில் அடிக்கடி பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பாச்சேத்தி காவல் சரகத்தில் ஒரு கும்பல் சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நடந்தது.
அதன்பின் மானாமதுரைக்கு துணைக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற என்கவுண்டர் செய்வதில் முத்திரை பதித்தவர் என காவல்துறையில் பேசப்பட்ட வெள்ளைத்துரை சார்பு ஆய்வாளரை கொலை செய்த குற்றவாளிகள் என காவல்துரையால் கைது செய்யப்பட்ட இருவரை சுட்டுக்கொன்ற சம்பவமும் மானாமதுரை பகுதியில் நடந்துள்ளது.
வெள்ளைத்துரை பதவி உயர்வு பெற்றுச் சென்றவுடன் மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவர்கள் அதிக நாட்கள் இங்கு பணி செய்தது கிடையாது. சமீபத்தில் இங்கு துணை கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் இரு ஆண்டுகள் வரை மானாமதுரையில் பணி செய்துவிட்டு பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார்.
அதன்பின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ் அங்கிருந்து இடமாறுதலாகி கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள் திடீரென இவர் கடந்த வாரம் மதுரைக்கு மாறுதலாகி சென்றுவிட்டார். ஏற்கனவே ராஜேஷ் மதுரைக்குத்தான் இடமாறுதல் கேட்டதாகவும் கிடைக்காத நிலையில் மானாமதுரையில் பொறுப்பேற்றார். அதன்பின் மதுரைக்கு இடமாறுதல் கிடைத்தவுடன் மானாமதுரையிலிருந்து சென்றுவிட்டார் எனவும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடக்கும் மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் துணைக் கண்காணிப்பாளர் இல்லாத நிலையில் சிவகங்கையில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் மானாமதுரையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். எனவே விரைவில் மானாமதுரைக்கு துணை கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.