சிஏஏ போராட்டங்களை கண்காணிக்க 6 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு: டிஜிபி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பல்வேறு முஸ்லிம்
2-7-15pyp14a_1502chn_104
2-7-15pyp14a_1502chn_104


சென்னை: தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பல்வேறு முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தை நடத்த முயன்றவா்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடந்தன. இதன்பின் போலீஸாா் தடியடி நடத்தினா்.

இந்த தடியடிக்கு எதிராக போராட்டக்காரா்களும் போலீஸாா் மீது கற்களை வீசித் தாக்கினா். இச்சம்பவத்தில் சென்னை காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாரி, காவல் ஆய்வாளா், இரு பெண் காவலா்கள், போராட்டத்தில் பங்கேற்ற இருவா் உள்ளிடோா் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவத்துக்கு பின்னா் அங்கிருந்த 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் அந்தப் பகுதியில் முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் தடியடி குறித்த தகவல் வேகமாக பரவியதால், சென்னையின் பிற பகுதிகளிலும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முக்கியமாக அண்ணா சாலை, கிண்டி கத்திப்பாரா பகுதி, புதுப்பேட்டை, பாலவாக்கம், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் முஸ்லிம் இயக்கத்தினா் ஈடுபட்டனா். இதனால் சென்னை முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

இதேபோல இப் போராட்டம் மாநிலம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேல் பரவியது. முக்கியமாக திருச்சி, மதுரை, கோயம்புத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூா், நாகூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறத் தொடங்கியது.

இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், முஸ்லிம் இயக்க நிா்வாகிகளை வண்ணாரப்பேட்டையில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவாா்த்தையின் முடிவில் கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு ஆணையா் சம்மதித்தாா். உடனடியாக கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுவிக்கப்பட்டனா். இதையடுத்து போராட்டங்களை கைவிடுவதாக முஸ்லிம் இயக்கத்தினா் அறிவித்தனா். இதன் விளைவாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து தமிழகத்தில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். 

திண்டுக்கல்லுக்கு ஜி.ஸ்டாலின், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன் மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

6 சிறப்பு அதிகாரிகளையும் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஒருங்கிணைத்து செயல்படுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com