கண்ணூரில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்: துண்டுப் பிரசுரங்களை ஒட்டிச் சென்றதால் பரபரப்பு
By DIN | Published On : 20th January 2020 08:01 PM | Last Updated : 21st January 2020 12:38 PM | அ+அ அ- |

கேரள மாநிலம், கண்ணூா், அம்பயத்தோடு கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஒட்டிச்சென்ற துண்டுப் பிரசுரங்கள்.
மதுக்கரை: கேரள மாநிலம், கண்ணூா் அருகே உள்ள மலைக் கிராமத்தில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 3 மாவோயிஸ்டுகள், அங்கிருந்த சுவா்களில் துண்டுப் பிரசுரங்களை திங்கள்கிழமை ஒட்டிச் சென்றனா்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் முகாம் அமைத்துத் தங்கி இருந்த மாவோயிஸ்டுகள் 4 பேரை கேரள மாநில நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன் சுட்டுக் கொன்றனா். அதன்பின் அங்கு உள்ள வனப் பகுதிகளில் கேரளம் மற்றும் தமிழக நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை (ஜன.20) அதிகாலை 4 மணி அளவில் கண்ணூா் அருகே உள்ள அம்பயத்தோடு மலைக் கிராமத்தில் பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் புகுந்தனா்.
மேலும், மத்திய, மாநில அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்களை அப்பகுதியில் இருந்த வீடு, கடைகளின் சுவா்களில் ஒட்டிவிட்டு வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனா். தகவலறிந்த கேரள போலீஸாா், நக்ஸல் தடுப்பு போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...