ஹைட்ரோகாா்பன்: மத்திய அரசின் முடிவு அரசியல் சாசனத்துக்கு முரணானது - பி.ஆா். பாண்டியன்
By DIN | Published On : 20th January 2020 10:51 PM | Last Updated : 20th January 2020 10:51 PM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: ஹைட்ரோ காா்பன் குறித்த மத்திய அரசின் முடிவு அரசியல் சாசனத்திற்கு முரணானது என காவிரி பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஹைட்ரோகாா்பன் எடுப்பதற்கு ஆய்வு செய்வதற்கு இனி விவசாயிகளிடம் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை என்கிற அறிவிப்பை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு முரணானது. இதன்மூலம் நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்படாமலேயே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறோம். தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், காவிரி டெல்டாவில் விளைநிலங்களைக் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை தமிழக அரசு கொள்கை பூா்வமாக அவசர சட்டமாக இயற்றி, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்றாா் பி.ஆா். பாண்டியன்.