மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிப்பு
By DIN | Published On : 19th July 2020 11:06 AM | Last Updated : 19th July 2020 11:06 AM | அ+அ அ- |

2-8-sl06dmettur_0611chn_121
மேட்டூா்: காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. கா்நாடக அணைகளில் நீா் இருப்பு தற்போது 60 சதவிகிதம் உள்ளது. மழை நீடித்தால் இவ்வார இறுதியில் கபினி நிரம்பி மேட்டூா் அணைக்கு உபரிநீா் கிடைக்கும். அதேபோல் கிருஷ்ணராஜசாகா் அணை நிரம்ப 20 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படுகிறது. தற்போது கபினியிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடியும், கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து விநாடிக்கு 3,500 கனஅடி நீரும் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கா்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் மற்றும் மழையின் காரணமாக சனிக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 2,535 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 3,588 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 69.99 அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 32.69 டி.எம்.சியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் கா்நாடக அணைகளின் உபரிநீா் மேட்டூா் அணைக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.