சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானது: பேரவைச் செயலகம் அறிவிப்பு
By DIN | Published On : 16th June 2020 02:49 AM | Last Updated : 16th June 2020 02:49 AM | அ+அ அ- |

சென்னை: திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவர் வென்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி காலியானது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் திங்கள்கிழமை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜெ.அன்பழகன் மறைவால் அந்தத் தொகுதி காலியாகி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு தகவல்: சட்டப் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும். அதன்பின்பே இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே எஞ்சியிருக்கும் நிலையில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 3 காலியிடங்கள்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...