கரோனா தொற்றால் தென்மாவட்டங்களில் உயிரிழப்பு இரு மடங்கு அதிகரிப்பு: முதல்வர் தலையிட சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

கரோனா தொற்றினைப்பற்றிய முழுவிபர அறிக்கையை கடந்த ஜுன் 7-ஆம் தேதி வெளியிட்ட தமிழக அரசு, அதன்பின் சனிக்கிழமை (ஜுன் 20) மீண்டும் வெளியிட்டுள்ளது.
சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.


 
மதுரை: மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில்  கரோனா  தோற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளதால் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விரைவான நடவடிக்கைகள்  மேற்கொள்ள வேண்டுமென்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்றினைப்பற்றிய முழுவிபர அறிக்கையை கடந்த ஜுன் 7-ஆம் தேதி வெளியிட்ட தமிழக அரசு, அதன்பின் சனிக்கிழமை (ஜுன் 20) மீண்டும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன. 

இதில், காஞ்சிபுரம், சென்னையை மண்டலமாக இருப்பதால் அதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன.  சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இம்மாவட்டங்களில் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கலாம். ஆனால் தொற்றும் மரணமும் இரு மடங்கு அதிகமாகியுள்ளதை அபாய எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.  

முதல் தொற்று உறுதிசெய்யப்பட்டதிலிருந்து 92 நாள்களில் ஏற்பட்ட பாதிப்பு இந்த 13 நாள்களில் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 31-இல் தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், சென்னை மண்டலத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு வருகிறவர்களைக் கட்டாயம் கரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் இந்த ஆணையை மாவட்ட நிர்வாகங்கள் பின்பற்றவில்லை. தொடர்ந்து இதுகுறித்து அறிக்கையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 5 நாள்களாகத்தான் மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டன. அதற்குள் முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் பெரும் எண்ணிக்கையில் சென்னையிலிருந்து மக்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இவர்களைக் கண்டறிந்து சோதனையை மேற்கொள்ளும் பணியை மிகவிரைவாகச் செய்யவேண்டியுள்ளது. காய்கறி மற்றும் அனைத்துவகையான வணிக சந்தை, ரயில் நிலையம், விமான நிலையம் என மதுரையை மையப்படுத்தியே சுற்றியுள்ள மாவட்டங்கள் இயங்குகின்றன. அதனாலேயே மதுரைக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவற்றைப் புரிந்து கொண்டு மதுரையை மையப்படுத்தி தென்மாவட்டங்களுக்கான தனித்த திட்டமிடலும் அணுகுமுறையும் தேவை. 

அடுத்த இரண்டு வாரங்களில் கரோனா நோய்தொற்றின் வேகம் தென்மாவட்டங்களில் மிகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

எனவே தென்மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக செயல்திறன் படைத்த ஒருவரை உடனடியாக நியமியுங்கள். மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப தனித்த ஏற்பாடுகளும் அதே நேரத்தில் தென்மாவட்டங்கள் முழுமைக்குமான சில பொதுவான திட்டங்களும் வகுக்கப்படவில்லையெனில் கடும்பாதிப்பினைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

முறையான நிர்வாக ஏற்பாட்டினை உறுதிப்படுத்தினால்தான் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட ஆறு மாவட்டங்களிலும் கரோனா தொற்றின் பாதிப்பினைக் கட்டுப்படுத்த முடியும்.  நிலைமை இன்னும் கைமீறிப்போய்விடவில்லை. ஆனால் வரும் வாரத்தைத் தவறவிட்டால், கடைசிவாய்ப்பினைத் தவறவிடுவதாகவே பொருள்.

எனவே இது குறித்து தமிழக முதல்வராக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com