நாமக்கல்லில் 18 ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்கு குற்றவாளி கைது

நாமக்கல்லில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி 18 ஆண்டுகளுக்கு பின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 
நாமக்கல்லில் 18 ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்கு குற்றவாளி கைது

நாமக்கல்: நாமக்கல்லில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி 18 ஆண்டுகளுக்கு பின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி. சாந்தியின் தம்பி செந்தில்குமார் மற்றும் பாட்டி மாராயி ஆகியோர் கடந்த 2002 செப்.22-ஆம் தேதி சுப்பிரமணியை கொலை செய்ததாக சாந்தி மற்றும் மாராயி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சாந்தியின் தம்பி செந்தில்குமார் மட்டும் தனது மனைவி குழந்தைகளுடன் ஊரை விட்டு சென்று விட்டார். அவர் காவல்துறையினருக்கு தெரியாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக 2004-இல் விசாரித்த நீதிமன்றம் செந்தில்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், சாந்தி மற்றும் மாராயி ஆகியோருக்கு மட்டும் வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு நாமக்கல் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 2005-ஆம் ஆண்டு இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டு 2007-இல் சாந்தி உயிரிழந்து விட்டார், மாராயி வயது முதிர்வு காரணமாக 2009-இல் சிறையிலேயே இறந்து விட்டார்.

இவ்வழக்கில் செந்தில்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த 2003-ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சுமார் 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை பிடிப்பதற்காக, நல்லிப்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சேர்வை காரம்பாளையம் , மாப்பிள்ளைகவுண்டன்புதூர் என்ற ஊரில் குடும்பத்தினருடன் குடியிருந்து லாரி ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வியாழக்கிழமை காலை கேரளாவில் இருந்து லாரி ஒட்டிவந்த செந்தில்குமாரை கோவை வழந்தாயமரம் சோதனைச்சாவடி அருகே கைது செய்தனர். 18 ஆண்டுகளாக தலைவறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com