கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி மன்றத்தினர் ரூ. 1 லட்சம் நிவாரணப் பொருள் வழங்கினர்

ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை, கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ஆர்.லதா வழங்கினார். 
கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி மன்றத்தினர் ரூ. 1 லட்சம் நிவாரணப் பொருள் வழங்கினர்

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூரில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தினர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சார்பில், இந்தப் பொருள்கள் வியாழக்கிழமை  வழங்கப்பட்டது.

லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் அமைந்துள்ள  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில், கரோனா தொற்று ஊரடங்கிற்கான  நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சமூக இடைவெளியுடன்  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவர் எம்.சாம்பசிவம் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மன்றச்  செயலாளர் என். செல்வராஜ் வரவேற்றார். அதங்குடி, கூத்தாநல்லூர், சேகரை, லெட்சுமாங்குடி, தோட்டச்சேரி, கீழவாழாச்சேரி, மேல வாழாச்சேரி,  பூந்தாழங்குடி , பாண்டுக்குடி, பண்டு தக்குடி , பனங்காட்டாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்ற ரூ. 1 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை, கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ஆர்.லதா வழங்கினார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியது: "வெளியில் வரும்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி அல்லது சோப்புப் போட்டோ, கைகளை நன்றாக கழுவ வேண்டும். இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இடைவெளி விட்டு பேச வேண்டும். இவை மூன்றையும் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 

அடுத்து, நம் வீட்டுக்கு அருகே, வெளி மாவட்டத்திலிருந்தோ, வெளி மாநிலத்திலிருந்தோ, உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்தாலும் சரி, காவல் நிலையத்திலோ, நகராட்சியிலோ, ஆரம்ப சுகாதார நிலையத்திலோ தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கரோனா தொற்று பரவும். வெளியில் வரும்போது, குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடந்தால், கரோனா தொற்று குறையும். அனைவரும் பாதுக்காப்புடன் இருந்து கொடிய கரோனா தொற்றை விரட்டியடிப்போம்" என்றார். 

தொடர்ந்து, பொருளாளர் ஏ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் கூறியது: "கூத்தாநல்லூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் கடந்த, 1988 ஆம் ஆண்டு, 32 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவர் விநோதகனால் தொடங்கப்பட்டது. முதல் தலைவர் மருத்துவர்தான். செயலாளர் கன்னையன், பொருளாளர் ஏ.பண்டரிநாதன் உள்ளிட்டோர், 100 உறுப்பினர்களுடன் மன்றம் செயல்பட்டது. தற்போது,750 உறுப்பினர்களுடன் வழிபாடு மன்றம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், மாலையணிந்து, இரு முடி கட்டி, 14 பேருந்துகளில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று வருகிறோம். 

கூத்தாநல்லூரைச் சுற்றியுள்ள பள்ளிகளிலிருந்து 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், முதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கி, நிதியுதவியும் செய்யப்பட்டு வருகிறது. கஜா புயல், தற்போது கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பேரிடர் காலங்களில், ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில், நிவாரணங்கள் வழங்கப்படுகிறது என்றார். தொடர்ந்து, ரூ.25 ஆயிரம் மதிப்பில், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, நகராட்சி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு தரமான முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் கி. அருண்குமார், லயன்ஸ் சங்க முன்னாள் செயலாளர் கே.சையது முஸ்தபா, வர்த்தக சங்கச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத் தலைவர் உதயகுமார், சமூக ஆர்வலர்கள் ராஜசேகரன், அய்யப்பன், முத்துக்குரு சுவாமி, மனோலயம் மன வளர்ச்சிக்  குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனர் ப.முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க துணைத் தலைவர் சிவ. வரதராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com