ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் பலி
By DIN | Published On : 01st March 2020 05:59 PM | Last Updated : 01st March 2020 05:59 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக 78 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சீனாவின் ஹுபேய் மாகாணம் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த் பகுதியைச் சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர் சார்லஸ் கெய்ட்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் ஜப்பானில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் வந்த 164 ஆஸ்திரேலியர்களில் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கப்பலில் வந்த அனைவரும் பெர்த் நகரில் உள்ள சர் சார்லஸ் கெய்ட்னர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 78 வயதான முதியவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆய்திரேலியாவில் கரோனா வரைஸ் தொற்றுக்கு பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த முதியவரின் மனைவியும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான தலைமை மருத்துவ அதிகாரி ராபர்ட் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானில் இருந்து வந்த ஒருவருடன் சேர்த்து ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 26 பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இத்தாலி மற்றும் ஈரானில் இருந்து வருபவர்களுக்கு பயணத் தடையை விதித்துள்ளது ஆஸ்திரேலியா.