கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை தொடங்குகிறது அமெரிக்கா?

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை தொடங்குகிறது அமெரிக்கா?

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா திங்கள்கிழமை தொடங்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழிங்டன்: கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா திங்கள்கிழமை தொடங்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,800க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 1,56,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் தற்போது வரை 3,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 117 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 49 மாகணங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் 12 ஆராய்ச்சி குழுக்கள் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு  முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.  முக்கியமாக, அவர்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியிலும், புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பாரம்பரிய தடுப்பூசிகளைக் காட்டிலும் அதிக சக்திவாய்ந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதிலும், சில ஆராய்ச்சியாளர்கள் தற்காலிக தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். சீனா மற்றும் தென்கொரியாவிலும் இதேபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் சூழலை எதிா்கொள்வதற்காக, சாா்க் கூட்டமைப்பு நாடுகள் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமா் மோடி, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சாா்க் நாடுகள் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பீதியும், குழப்பமும் அடையாமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மேலும், கரோனாவை எதிா்கொள்வதற்காக, ‘கொவைட்-19 அவசரகால நிதி’ என்ற பெயரில் நிதியை உருவாக்க வேண்டும். இந்த நிதிக்கான தொகையை சாா்க் உறுப்பு நாடுகள் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும். முதல் கட்டமாக, இந்தியா சாா்பில் 1 கோடி டாலா் (சுமாா் ரூ.74 கோடி) வழங்கப்படும்.

இந்தியாவில் மருத்துவா்கள், நிபுணா்கள் ஆகியோரைக் கொண்ட அதிவிரைவு மருத்துவா்கள் குழு தயாா்படுத்தப்பட்டு வருகிறது. அவா்கள் போதிய மருந்துகள், பரிசோதனை உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருப்பாா்கள். சாா்க் உறுப்பு நாடுகளுக்கு அவா்கள் அனுப்பி வைக்கப்படுவா்.

இந்தியாவில் வைரஸ் பரவலை கண்காணிக்கவும் அது தொடா்பான தகவல்களை பகுப்பாய்வு செய்யவும் ‘ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு அமைப்பு’ என்ற வலைதளம் செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், அதன் மென்பொருளை சாா்க் உறுப்பு நாடுகளுக்கு வழங்க இந்தியா தயாராக இருக்கிறது.

மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு பொதுவான ஆராய்ச்சித் தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவி செய்யும் என்றாா் மோடி.

முன்னதாக, மோடி தொடக்கவுரையில் பேசுகையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு இந்தியாவில் கடந்த ஜனவரி பிற்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தாா். தெற்காசிய பிராந்தியத்தில் 150-க்கும் குறைவானவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டாலும், நாம் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினாா்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பு பணியில் விரைந்து செயல்படுமாறு அழுத்தம் கொடுத்து வருதை அடுத்து, தடுப்பூசி தயாரிப்பு பணியில் மிக விரைவாக நடந்து வருவதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில்,  கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை திங்கள்கிழமை (மார்ச் 16) அமெரிக்கா பரிசோதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரிசோதனை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத  அமெரிக்காவின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சியாட்டில் உள்ள  கைசர் பெர்மனண்டே வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற இருக்கும் இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவவனம்  நிதியுதவி செய்துள்ளதாகவும் அந்த சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜப்பானில் ஒரு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட கொவைட் -19 வைரஸ் இருப்பதைக் கண்டறிந்த சில அமெரிக்கர்களிடமிருந்தும் பரிசோதனை தொடங்கியதாகவும் விரைவில் நல்ல தடுப்பூசி அறிவிக்கப்படலாம் நம்பப்படுவதாக கூறப்படுகிறது.  

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை முழுமையாக சரிபார்க்க  12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கரோனா வைரஸ் பெரும்பாலான மக்களுக்கு, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற லேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. சிலருக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தற்போதுள்ள உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே, நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com