

கோவை: சிறுவாணி அணையில் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் உறிஞ்சுக் குழாய்களை அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கேரளா அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்த நிறுத்தக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் சிறுவாணி அணையை தமிழக அரசு 100 ஆண்டுகாலமாக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பராமரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் உறிஞ்சுக் குழாய்களை சட்டவிரோதமாக அடைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் கோவை மாநகராட்சிக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதேபோல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது சிறுவாணி அணை பயன்பாட்டு ஒப்பந்தத்தை மீறி நடப்பதாகும்.
எனவே கேரள அரசு சிறுவாணி அணையில் மேற்கொண்டு வரும் சட்டவிரோத பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.