கோவையில் நிவாரணம் வழங்க கோரிக்கை நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 28th May 2020 12:10 PM | Last Updated : 28th May 2020 12:10 PM | அ+அ அ- |

கோவை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கியது போல கரோனா நிவாரணம் வழங்கக்கோரி நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவில் திருவிழாக்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் போடப்படும் மேடை நாடகங்கள், நடனங்களை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறோம். பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை தான் எங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும். கரோனா பொது முடக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளோம். இதனால் உணவுக்கே வழியில்லாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம்.
எனவே அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கியது போல நாடக, நடன கலைஞர்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.