திருமலையில் பக்தர்களுக்கு தரிசனம் துவங்க அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 28th May 2020 11:50 AM | Last Updated : 28th May 2020 12:45 PM | அ+அ அ- |

திருப்பதி: 3 மாதங்கள் கழித்து திருமலையில் மீண்டும் பக்தர்களுக்கு தரிசனம் துவங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் தேவஸ்தானம் அனுமதி மறுத்தது. படிப்படியாக தளர்வுகளுடன் தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 4 ஆம் கட்ட பொது முடக்கம் முடிந்த பின் கோவில்களை திறக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி வழங்கினால் கோவிலில் பக்தர்களை தரிசனத்திற்கு பாதுகாப்பான முறையில் அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாநில அரசின் உத்திரவின் பேரில் கோவிலில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள், லட்டு கவுண்டர்கள், தரிசன வரிசைகள், என பக்தர்கள் கூடும் பல இடங்களில் தேவஸ்தானம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கோடுகள் வரைந்துள்ளது.
இந்நிலையில், மாதந்தோறும் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டம் வியாழக்கிழமை காலை திருமலையில் தொடங்கியது. பொது முடக்கம் காரணமாக அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. அதில் திருமலை திருப்பதியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே நேரடியாக கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன் அவர்கள் அனைவரும் இணைந்து பொது முடக்கத்திற்கு பின் ஏழுமலையான் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கூட்ட நிறைவுக்கு பின் அதில் கலந்துரையாடப்பட்ட அம்சங்கள் குறித்து அறிவிக்கப்பட உள்ளது.