சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கரோனா: மாவட்டத்தில் பாதிப்பு 73 -ஆக உயர்வு 

சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு
சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கரோனா: மாவட்டத்தில் பாதிப்பு 73 -ஆக உயர்வு 

ஈரோடு:  சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 -ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டாலும், மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு கட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் கரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போது கரோனா கட்டுக்குள் இருக்கும் மாவட்டங்களில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு சேலம் மாவட்டத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர், விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து கொடுமுடியை சேர்ந்த நபரை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னையில் பணியாற்றி வரும் ஈரோடு சூளை பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்  அவர் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் வந்தார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு கார் மூலம் ஈரோடு வந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து ஈரோடு வந்த அந்த பெண்ணை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இதனால், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், அரசு அறிவிப்பில் கொடுமுடியை சேர்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சேர்க்காததால் தற்போது வரை 72 ஆகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது: சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பெண்ணின் கணவர், மகன் உள்ளிட்ட 4 பேரை தனிமையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். அவரது வீடும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொடுமுடியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவருக்கு கரோனா தொற்று தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட தகவல் அரசுக்கு  கிடைக்காததால், அதனை சோ்க்கவில்லை. ஆனால்,மாவட்டத்தில் கரோனா தொற்றினால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் கூறியதாவது: சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 மணி நேரத்தில், அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இதையடுத்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டின் சுற்றுப்புற பகுதியில் இருப்பவர்களின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com