பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் தொட்டியனூர் மக்கள்

அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி தொட்டியனூர் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் தொட்டியனூர் மக்கள்

அவிநாசி: அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி தொட்டியனூர் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி 1வது வார்டுக்கு உள்பட்ட தொட்டியனூர் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்துளை  குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது,

எங்கள் பகுதியில் கடந்த 20வது ஆண்டுகளுக்கு முன்னால்  ஆழ்துளை குடிநீர் விநியோகிக்கப்பட்டு அடி பம்பு குழாய் மூலம் பிடித்து வந்தோம். அதற்குப் பிறகு ஆழ்துளை குடிநீர் வருவதே இல்லை. அதற்கு மாற்றாக  ஆற்றுக் குடிநீர் 3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்தது. பிறகு அதுவும் வாரம் ஒரு முறை என மாறி, தற்போது மாதம் ஒரு முறை மட்டுமே வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள், தொடர் சிகிச்சை உள்ள பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.

மாதம் ஒருமுறை ஆற்றுக் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தாலும், அழுத்தம் குறைவாக வருவதால் மேல்நிலை தொட்டிக்கு ஆற்றுகுடிநீர் ஏற்ற படாமல், ஒரே குழாயில் குறைந்த அழுத்தத்தில் குறைவான அளவு ஆற்று நீரை பிடித்து மாதக்கணக்கில் உபயோகித்து வருகிறோம்.  நீண்டநேரம் பொது மக்கள் காத்திருந்து குடிநீர் பிடித்தாலும் குழாயில் போதுமான அளவு வருவதில்லை.

இதனால் அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தோம். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளியே செல்ல முடிவதில்லை. அப்படியே சென்றாலும் தோட்டத்து உரிமையாளர்கள் எங்களை உள்ளே வர அனுமதிப்பதில்லை. தோட்டத்து குடிநீரை யாவது உபயோகித்து வந்த எங்களுக்கு தற்போது இதுவும் ஏமாற்றமாகி விட்டது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை மனு அளித்தும் பல ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் இல்லை. கரோனா காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைகளை உணர்ந்து எங்களுக்கு போதுமான ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

அதேபோல ஆற்றுக் குடிநீர் வாரம் ஒரு முறையாவது மேல்நிலை தொட்டிக்கு ஏற்றி, அனைவருக்கும் ஆற்றுக் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் உதவி எண்ணுக்கும் புதன்கிழமை புகார் அளித்துள்ளோம். எங்களுக்கு நிரந்தரமாக குடிநீர் பற்றாக்குறை தீர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மயில்சாமியிடம் கேட்டபோது-

தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஆழ்துளை கிணற்று நீர் வற்றி விட்டது.தற்சமயம் கூட புதிய ஆழ்துளை கிணறு அமைத்தும் உரிய பலன் கிடைக்கவில்லை. ஆகவே தொட்டியனூர் பகுதியில் ஏற்கனவே உள்ள ஆற்று குடிநீர் குழாயில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டுள்ளதா என தற்போதைய தீர்வாக சரிபார்த்து வருகிறோம்.

மேலும் தண்டுக்காரன்பாளையம் பகுதியில் உள்ள 2வது குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டியிலிருந்து புதிய குழாய்கள் அமைத்து தொட்டியனுரில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு வினியோகித்து அங்கிருந்து அப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் படிப்பதற்கான பணியை கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னாலே துவங்கினோம். ஆனால் பொது முடக்கம் காரணமாக ஒப்பந்ததாரரால் உரிய பணியாட்களை வைத்து முழுமையாக பணி செய்ய இயலவில்லை. விரைவில் புதிய குழாய் மூலம் அமைத்து தொட்டியனூர் பகுதிக்கு ஆற்றுக் குடிநீர் நிரந்தரமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com