மதுரையில் கருணாநிதியின் வெண்கலச் சிலை திறப்பு

மதுரையில் அரசு உருவாக்கிய பல்வேறு தடைகளைத் தாண்டி திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். 
மதுரையில் கருணாநிதியின் வெண்கலச் சிலை திறப்பு
மதுரையில் கருணாநிதியின் வெண்கலச் சிலை திறப்பு

மதுரை: மதுரையில் அரசு உருவாக்கிய பல்வேறு தடைகளைத் தாண்டி திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். 

மதுரை சிம்மக்கல் பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மு.கருணாநிதி சிலையை திறந்து வைத்துப்பேசியது:  

மதுரையில் பல தடைகளைத் தாண்டி திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. தந்தையின் சிலையை மகனாகிய நான்  திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன். திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் அறிவாலயம், முரசொலி அலுவலகம், காஞ்சிபுரம், ஈரோடு என பல பகுதிகளில் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் அங்கெல்லாம் சிலை வைப்பதற்கு அரசின் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லாத தனியார் இடங்களில் சிலைகள் திறக்கப்பட்டது. ஆனால் மதுரையில் சிலை வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது அரசு பல தடைகளை ஏற்படுத்தியது.

அரசும், அதிகாரிகளும் உருவாக்கிய தடைகளைத் தாண்டி சிலையை திறக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் திமுக தலைவரின் நினைவிடத்துக்கு எப்படி நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்ததோ அதேபோல அவரது சிலையை திறப்பதற்கும் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைத்துள்ளது. அரசு ஏற்படுத்திய பல தடைகளை தகர்த்து நீதிமன்ற அனுமதியின்பேரில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரின் சிலையில், அவர் நமக்களித்த 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம். இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ஆகிய கட்டளைகளை பின்பற்றி பாடுபடுவோம்.

தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் கனவு நிறைவேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவரது கனவை நிறைவேற்ற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்றார். முன்னதாக சிலை வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்குரைஞர்களை பாராட்டி கௌரவித்தார். மேலும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலையை வடிவமைத்த பொறியாளருக்கு மு.க.ஸ்டாலின் மோதிரம் அணிவித்து பாராட்டினார். 

நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மருத்துவர் சரவணன், முன்னாள் மேயர் குழந்தை வேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

8.5 அடி உயர வெண்கல சிலை

மதுரை சிம்மக்கல்லில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள சிலை 85 அடி உயரத்துடன் முழுவதும் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சிலையின் பக்கவாட்டில் மு.கருணாநிதியின் 5 கட்டளைகள் தமிழிலும், சிலையின் பின்புறத்தில் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையை உதயசூரியன் சின்னம் பொறித்த கல் தூண்கள் அடங்கிய பீடம் தாங்கிநிற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com