மருத்துவமனையில் தேவகோட்டை நகராட்சி ஆணையர்: தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி ஆணையருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில்
மருத்துவமனையில் தேவகோட்டை நகராட்சி ஆணையர்: தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி ஆணையருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவில்லை.

தேவகோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 10 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தனர்.

நகர்மன்றத் தலைவர் பதவிக்கு எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை இல்லாததால் குழப்ப நிலை நீடித்து வந்தது. இதையடுத்து, அமமுக ஆதரவுடன் தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக முயற்சி செய்தது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 19 ஆவது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஞானம்மாள் திமுகவில் இணைந்தார். இருப்பினும் தலைவர் பதவிக்கு திமுகவிடம் பெரும்பான்மை இல்லை.

எனவே 24 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.பிச்சையம்மாள் கடத்தப்பட்டிருப்பதாக திமுகவினர் காவல் நிலையத்தில புகார் அளித்தனர். இதுபற்றி தகவலறிந்த அதிமுகவினர் தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்ற உள்ளதையடுத்து, தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சி நடப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி மறைமுகத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தொடங்க உள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான அசோக்குமார் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிக்கை அனுப்பியிருந்தார். அதன்படி, அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் 27 பேரும் நகராட்சி அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் வருகை தந்தனர்.

ஆனால் நகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10.30 மணி வரை நடைபெறவில்லை. இதனால் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக, அமமுக உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்துள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மேற்கண்ட நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலை அந்நகராட்சி பொறியாளர் மதுசூனன் பொறுப்பு ஆணையராக இருந்து மறைமுகத் தேர்தலை நடத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முற்பகல் 11.30 வரை தேர்தல் நடைபெறவில்லை. திமுக உறுப்பினர்கள் தேவகோட்டை கோட்டாட்சியரிடம் இதுதொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com