தெருக்களில் திரியும் கால்நடைகளின் பிரச்னை தீர்க்கப்படும்: உ.பி.யில் பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சத்தீஸ்கர் அரசின் மாட்டு சாணம் வாங்கும் திட்டம் உத்தரப் பிரதேசத்தில் கொண்டுவரப்படும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

அமேதி: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சத்தீஸ்கர் அரசின் மாட்டு சாணம் வாங்கும் திட்டம் உத்தரப் பிரதேசத்தில் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  புதன்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சாலைகளில் திரியும் கால்நடைகள் பிரச்னையை சமாளிக்க மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அவரது  இந்த உரையை குறிப்பிட்டு, காங்கிரஸின் ஆலோசனையை அவர் நகல் செய்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரியங்கா காந்தி கூறினார்.

ஜகதீஷ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்பதை செய்து காட்டியுள்ளது என்றார். 

சத்தீஸ்கர் அரசு மக்களிடம் இருந்து ஒரு கிலோ மாட்டு சாணத்தை 2 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கியது. மக்கள் இந்த திட்டத்தை கேலி செய்தனர். ஆனால் பின்னர் மக்கள் தெருவில் அலையும் கால்நடைகளை வீடுகளில் வைத்து பராமரிக்கத் தொடங்கி, மாட்டுச் சாணத்தை அரசுக்கு விற்றனர். அரசு பொதுமக்களிடமிருந்து பெறும் சாணத்தை, அதை சுயஉதவிக் குழுக்களுக்குக் கொடுத்து, அதிலிருந்து மண்புழு உரம், உரம் தயாரிக்கும் பணிகளுக்கு பயன்படுத்துகிறது. உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைத்தால், இந்த திட்டத்தை இங்கும் தொடங்குவோம் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

மேலும் கால்நடைகளால் ஏற்படும் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். 

அரசாங்க வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாக காங்கிரஸின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தி கூறினார். இலவசங்களை மட்டும் வழங்காமல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க காங்கிரஸ் விரும்புவதாக கூறினார். மேலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என்றார்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.10,000 வரை ஊதியம் உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், தொழில் தொடங்க விரும்பும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகவும், கோதுமை, நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்துவதுடன், வணிகர்களின் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாகவும்  பிரியங்கா காந்தி கூறினார்.

காங்கிரஸ் அரசு கோதுமை மற்றும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500க்கு கொள்முதல் செய்யும் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும் என்றும் பிரியங்கா கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com