பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் தங்களுக்கான அழிவை தாங்களே தேடிக் கொள்வர்: பிகார் முதல்வர்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள் தங்களுக்கான அழிவைத் தாங்களே தேடிக் கொள்வர் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் தங்களுக்கான அழிவை தாங்களே தேடிக் கொள்வர்: பிகார் முதல்வர்
Published on
Updated on
1 min read

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள் தங்களுக்கான அழிவைத் தாங்களே தேடிக் கொள்வர் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தான் இறங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு கட்சித் தொண்டர்களிடத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கியுள்ளேன். ஆனால், பிரதமர் வேட்பாளருக்கானப் போட்டியில் நான் இல்லை. நான் ஒரு விஷயத்தைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள் அவர்களுக்கான அழிவை அவர்களேத் தேடிக் கொள்கிறார்கள் என்று தான் கூறுவேன். அது நாட்டுக்கான அழிவும் ஆகும். பாஜகவை ஆட்சியிலிருந்து கீழே இறக்குவதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே என்னுடைய ஒரே இலக்கு. கடந்த காலங்களிலும் பல தருணங்களில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நினைத்துள்ளேன். நான் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களை தில்லியில் சந்தித்தேன். எங்களுக்கு இடையேயான இந்த சந்திப்பானது நேர்மறையானதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. நான் நாடு முழுவதும் பயணம் செய்து பாஜக அல்லாத கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன்.

வரலாற்றை திருத்தி எழுதுவதில் பாஜக ஆர்வமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். நாட்டின் விடுதலைக்கு அவர்களது பங்களிப்பு எதுவும் இல்லை. அவர்கள் வெறுப்புணர்வை பரப்ப மட்டுமே முயற்சி செய்தனர். அவர்கள் நாட்டிலிருந்து முழுவதுமாக துடைத்தெடுக்கப்பட வேண்டியவர்கள். அவர்களிடத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக நாட்டுக்கும் ஒன்றும் செய்யவில்லை பிகாருக்கும் ஒன்றும் செய்யவில்லை. பிகாருக்கான சிறப்பந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது? மாநிலத்தில் புதிய அரசு அமைத்தவுடன் விசாரணை அமைப்புகள் எங்களுக்கு இடையூறு செய்கின்றன. அம்பேத்கர் அரசியலமைப்பை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அரசியலமைப்பு பட்டியலினத்தவர்கள் மற்றும் பட்டியலினப் பழங்குடி மக்களுக்கு உரிமைகளை வழங்குகிறது. மற்ற நலிவடைந்த பிரிவினருக்கும் அரசியலமைப்பு உரிமைகளை வழங்குகிறது. நாம் நாட்டின் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com