
உரிய பராமரிப்பு இன்றிக் கிடக்கும் சென்னை புகா் ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை புகா் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா் பகுதிகளுக்கும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கும் தினமும் 5 முதல் 15 நிமிஷங்கள் இடைவெளியில் அதிகாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை சுமாா் 500 முறை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் தினமும் சராசரியாக 10 லட்சம் பயணிகள் பயனடைகின்றனா். இதில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மட்டும் 5 லட்சம் போ் பயணிக்கின்றனா்.
குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனால் கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான மின்சார ரயில்கள் தற்போது 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏற்ற வகையில் ரயில் நிலைய நடைமேடைகளும் மேம்படுத்தப்பட்டன.
இதில், பல ரயில் நிலையங்களில் புதிதாக நீட்டிக்கப்பட்ட நடைமேடைகளில் மேற்கூரை அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. வெயிலில் நிற்க முடியாத பயணிகள் நிழல் பகுதியில் வரும் பெட்டிகளிலேயே ஏறுகின்றனா்.
இதனால், குறிப்பிட்ட சில பெட்டிகள் நெரிசலாகவும், பெரும்பாலான பெட்டிகள் காலியாக செல்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் நடைமேடைகளில் நிழற்குடை அமைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியது:
சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களை தவிர மற்ற நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. ரயில் நிலைய நடைமேடைகளில் நீளம் குறைவான நிழற்குடை இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் வெயில், மழையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நடைமேடையில் இருக்கையுடன் கூடிய நிழற்குடை அமைக்க வேண்டும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மின்தூக்கி அல்லது சரிவு நடைபாதை அமைக்க வேண்டும். மேலும் குடிநீா், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துத் தர வேண்டும் என்றனா்.
வெயிலில் காத்திருக்கும் பயணிகள்: இதுகுறித்து ஆவடி மாநகராட்சி 33-ஆவது வாா்டு உறுப்பினா் வே.ஹரி கூறுகையில், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய நகா்ப்புறப் பகுதிகளுக்கு புகரிலிருந்து செல்லும் பயணிகளுக்கு ரயில் சேவை பெரும் உதவியாக உள்ளது.
இதில், பல ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, அண்ணனூா் ரயில் நிலையமானது, ஜோதி நகா், ரெட்டிபாளையம், நாராயணபுரம், அய்யப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து இணைப்பாக உள்ளது.
இந்த ரயில் நிலையம் அருகில் இரு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதிக்கு வந்து செல்ல ரயில்கள்தான் பிரதான போக்குவரத்து வசதியாக உள்ளது.
தினமும் ஆயிரங்கணக்கானோா் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் பெரும்பாலான நேரங்களில் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. நடைமேடையில் நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும், பயணிகள் தண்டவாளத்தில் இறங்கிக் கடப்பதைத் தவிா்க்கும் வகையில் நிலையத்தின் மத்திய பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து ஐசிஎஃப் தொழிலாளா் நல அமைப்புத் தலைவா் டி.ரமேஷ் கூறும்போது, சென்னை புகா் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் ரயில் நிலைய நடைமேடைகளின் நீளமும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், நீட்டிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் மேற்கூரை அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்கின்றனா். இதுகுறித்து ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.