பொன்னியின் செல்வன் 2: தப்பித்ததா? தடுமாறியதா? திரை விமர்சனம்

திரைமொழி அனுபவத்திற்கும், பொன்னியின்செல்வன் எனும் பெரும் கதையாக திரையில் வெளிப்பட்ட படைப்பாக்கத் திறனுக்கும் இத்திரைப்படத்தினை ரசிகர்கள் அனுபவிக்கலாம்.
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2

இலங்கை சென்ற வந்தியத் தேவனும், அருண்மொழி வர்மனும் களம் வீழ்த்தப்பட்டு கடல் விழுங்க ஊமைராணி எனப்படும் மந்தாகினி கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் நிறைவடைந்திருந்தது பொன்னியின் செல்வன் முதல்பாகம். 

கல்கி எழுதிய சோழர்களின் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க தமிழ்த் திரைத்துறை பல காலங்களில் முயன்று வந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாவதாக வந்த அறிவிப்பு அந்த கதையின் ரசிகர்களுக்கும், எண்ணற்ற வாசகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பலரும் எடுக்க முயன்று நடக்காத பொன்னியின் செல்வன் கதை திரையில் வரவிருக்கிறது எனும் ஆவலே இந்தப் படத்திற்கான பெரும் விளம்பரமாக அமைந்தது.

போதாததற்கு படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு இந்தப் படத்தின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. முதல்பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதிலிருந்து அடுத்த பாகம் எப்படி இருக்கப்போகிறது என்கிற கேள்வி வாசகர்களைக் கடந்து சினிமா ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது. இவற்றுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. 

எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன் 2?

முதல்பாகத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருண்மொழி வர்மன் இறந்த செய்தி கேட்ட ஆதித்த கரிகாலன் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருக்க தஞ்சையும் சோகத்தில் மூழ்குகிறது. இன்னொருபுறம் ஊமைராணியால் காப்பாற்றப்பட்ட அருண்மொழி வர்மனும், வந்தியத் தேவனும் பாண்டியர்களிடமிருந்து தப்பித்து மருத்துவ உதவிக்காக புத்த பிட்சுகளிடம் தஞ்சமடைகின்றனர். ஒரு கட்டத்தில் அருண்மொழி வர்மன் உயிருடன் இருக்கும் செய்தி தஞ்சையை அடைகிறது.

ஆனால் ஆதித்த கரிகாலனைக் கொல்லக் காத்திருக்கும் நந்தினி அவரை கடம்பூர் வரச் செய்கிறார். நந்தினி மற்றும் பாண்டியர்களால் கொல்லப்படும் அபாயத்தை அறிந்துகொண்டாலும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனைக்கு வருகிறார். அவருக்கு அங்கு என்ன நடந்தது? சோழ தேசம் என்ன ஆனது? அருண்மொழி வர்மன் அரசனாக முடிசூட்டப்பட்டாரா இல்லையா? என்பதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் மீதி கதை. 

முன்பே தெரிவித்ததைப் போல் இந்தத் திரைப்படத்தின் பெரும் பலம் இதற்காக இணைந்த நடிகர்கள் பட்டாளம். ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, கார்த்திக், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு, நாசர் இவர்களுடன் பின்னணி குரலில் நடிகர் கமல்ஹாசன் என இந்தப் பட்டாளம் படத்தை பலரிடம் கொண்டு செல்ல துணை புரிந்திருக்கிறது. கதைக்குள் வரும் வந்தியத் தேவனும் குந்தவைக்கும் இடையேயான காதல் காட்சிகளும், நந்தினியும், ஆதித்த கரிகாலனும் சந்தித்துக் கொள்ளும் காட்சியும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் காதல் காட்சிக்கான படமாக்கல் முறை அழகாக இவ்வித காட்சிகளில் ஒளிந்திருந்து சிறப்பாக்கியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களைத் தாங்கியுள்ள விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் ராவணன் திரைப்படத்தை நினைவுபடுத்தினாலும் போட்டி போட்டுக் கொண்டு இருவரும் நடித்துள்ளனர். பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தாலும் ஆதித்த கரிகாலனைக் கொல்ல தயங்கி இயலாமையில் அழுகும் இடங்களில் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் ஸ்கோர் செய்துள்ளார்.பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம்ரவி சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். த்ரிஷா படம் முழுக்க வருகிறார். அழகாக இருக்கிறார். அதைக் கடந்து அவரின் முக்கியத்துவத்தை சொல்லும் விதமாக ஒரு இடமும் இல்லை.

முந்தைய பாகத்தில் காதல் மன்னனாக வந்த வந்தியத்தேவன் சண்டைக் காட்சிகளில் பிசியாக இருக்கிறார். குந்தவையைப் போலவே பூங்குழலி கதாபாத்திமும் முழுமை பெறவில்லை. முந்தைய பாகத்தில் வெறுமனே இருந்த விக்ரம் பிரபுவுக்கு இந்த பாகத்தில் சற்று வாய்ப்பு கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரவிவர்மாவின் கேமரா பல நல்ல காட்சிகளை நமக்கு கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ரகுமானின் பின்னணி இசை காட்சிகளின் ஆழத்தை உள்வாங்கியிருக்கிறது. இறுதிக் காட்சிகளில் வரும் பாடல் ஒரு சாம்ரஜ்ஜியத்தின் பிரமாண்டத்தை காட்டியுள்ளது. 

ஊமைராணி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். கடந்த பாகத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கதாபாத்திரத்திற்கு பெரிதாக காட்சிகள் எதுவும் அமைக்காமல் அரண்மனை வரை அழைத்து வந்து அவரை சாகடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். பல கதாபாத்திரங்கள் இடம்பெறுவதால் யாரைச் சுற்றி கதை நகர்கிறது என்பதில் சில நேரங்களில் தடுமாற்றம் வருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற பல இடங்கள் திரை மொழிக்காக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக நாவலில் வரும் மதுராந்தச் சோழன்,சேந்தன் அமுதன் கதாபாத்திரங்கள் வரலாற்றில் மதுராந்தகச் சோழன் எனும் ஒரு கதாபாத்திரம்தான். அதிலும் நாவலின் இறுதியில் சேந்தன் அமுதன் முடிசூடுவதாக கதை அமையும். ஆனால் திரைப்படத்தில் மதுராந்தகச் சோழன் முடிசூடுவதாக மாற்றி இயற்றியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். ஆதித்த கரிகாலன் இறப்பும் நந்தினியின் முடிவும் திரைமொழியாக வெளிப்பட்டிருக்கின்றன. இப்படி சில காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

இவை தவிர சோழர்களின் வரலாற்று அடையாளங்களை சரியாகக் காட்டும் வகையிலான எந்த இடங்களும் இதில் இடம்பெறவில்லை. சோழர்களின் கட்டுமானம், கலை, போர்த்திறன் என பல அம்சங்களும் திரைமொழியின் பிரமாண்டத்திற்காக வேறு ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளன. தஞ்சையில் இப்படியொரு மாடமாளிகை அரண்மனைகளாக இருந்ததாக வரலாற்று எச்சங்களே இல்லை. எனினும் திரைமொழி அனுபவத்திற்கும், பொன்னியின்செல்வன் எனும் பெரும் கதையாக திரையில் வெளிப்பட்ட படைப்பாக்கத் திறனுக்கும் இத்திரைப்படத்தினை ரசிகர்கள் அனுபவிக்கலாம். இதுதான் சோழர்களின் வரலாறு என கருதிக் கொள்ளாமல் திரையில் அரச அதிகாரப் போட்டிக்கான கதையாகக் கொண்டு ரசிகர்கள் இதனைப் பார்த்து ரசிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com