பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக செயற்குழு ஒப்புதல்
By DIN | Published On : 16th April 2023 04:06 PM | Last Updated : 16th April 2023 04:11 PM | அ+அ அ- |

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்தது.
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 70 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 320 பேர் அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழுஅதிகாரம் செயற்குழு வழங்கியது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும் அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்தது.
தொடர்ந்து, செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். நாடாளுமன்ற, பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்ற வேண்டும். வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநில மாநாடு நடத்தப்படும்.
திமுகவுடன் ரகசிய உறவுவைத்து அதிமுகவிற்கு துரோகம் செய்பவருக்கு தக்க பாடம் புகட்டிட வேண்டும். தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நடந்தாய் வாழி காவேரி, காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செயற்குழு கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம் நடத்த திமுக அரசு அனுமதி மறுப்பதாக கூறி அதிமுக சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.