ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி பிரதமருக்கு காா்கே கடிதம்
By DIN | Published On : 18th April 2023 02:29 AM | Last Updated : 18th April 2023 02:29 AM | அ+அ அ- |

மல்லிகாா்ஜுன காா்கே
இந்தியாவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதியுள்ளாா். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான தரவுகளின்றி சமூக நீதி மற்றும் மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்களின் செயலாக்கம் முழுமையடையாது என அக்கடிதத்தில் காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை மீண்டும் பதிவு செய்ய இக்கடிதத்தை எழுதுகிறேன். இக்கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு முறை குரல் எழுப்பியுள்ளனா்.
வரலாற்றில் முதல் முறையாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நாட்டின் 25 கோடி குடும்பங்களிடம் ‘சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-12-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. சில காரணங்களால் அக்கணக்கெடுப்பின் தரவுகளை வெளியிட அப்போது முடியவில்லை. ஆனால், 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதனை வெளியிடக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அரசிடம் வலியுறுத்தினா். ஆனால், அதனை அரசு பொருட்படுத்தவில்லை.
புதுப்பிக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளின்றி சமூக நீதி மற்றும் மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்களின் செயலாக்கம் ஒருபோதும் முழுமையடையாது. குறிப்பாக இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஒ.பி.சி) கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனா். முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது மத்திய அரசின் கடமை. அதனைக் கருத்தில் கொண்டு கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும். அதில் விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.