தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நியதியைதான் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார்- அண்ணாமலை விளக்கம்
By DIN | Published On : 28th April 2023 09:59 AM | Last Updated : 28th April 2023 09:59 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி எழுப்பியிருந்த கேள்விக்கு, நியதியை தான் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார் என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சென்னபசப்பாவுக்கு தமிழா்களின் ஆதரவை பெற சிவமொக்காவில் பிரச்சாரக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. பாஜக சாா்பில் நடத்தப்பட்ட இக்கூட்டம் முன்னாள் துணைமுதல்வா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
கூட்டம் தொடங்கியவுடன், அங்கிருந்த தமிழா்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபெருக்கியில் இசைக்க வைத்தனா். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாஜக முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை கட்டாயப்படுத்தி பாதியில் நிறுத்துவிட்டு கன்னட மாநிலப்பண்ணை பாடும்படி வலியுறுத்தினாா்.
இந்த சம்பவம் தமிழா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை பாதியில் நிறுத்தியது தமிழா்களை இழிவுப்படுத்தும் செயலாகும் என்று தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுப்படுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என்று தூத்துக்குடி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நியதியை தான் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
அடித்துக் கொண்டு புரளுவதற்கு அது திமுக மேடை இல்லை.
ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டினார்.
நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?
"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.
தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம் என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.