சூடானில் இருந்து மேலும் 231 இந்தியார்கள் நாடு திரும்பினர்!
By DIN | Published On : 29th April 2023 01:11 PM | Last Updated : 29th April 2023 01:13 PM | அ+அ அ- |

புதுதில்லி: ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கிய இந்தியா்களில் மேலும் 231 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில், அந்நாட்டில் 400-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.
இந்த மோதலை தொடா்ந்து அந்நாட்டில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானிலிருந்து மீட்கப்படும் இந்தியா்கள் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டு மீட்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, இந்திய கடற்படையின் ‘சுமேதா’ போா்க் கப்பல் மூலமாக சூடானின் போா்ட் சூடான் நகரிலிருந்து 278 இந்தியா்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 3 விமானங்களில் 392 இந்தியா்கள் மீட்கப்பட்டனா்.
தொடர்ந்து 4 கட்டமாக இதுவரை 1,360 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் விமானம் தில்லி வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெசங்கா் ட்விட்டரில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.