அடுத்த தோ்தல்களுக்கு தயாராகும் காங்கிரஸ்:மே 24-இல் காா்கே முக்கிய ஆலோசனை
By DIN | Published On : 22nd May 2023 12:55 AM | Last Updated : 22nd May 2023 03:10 AM | அ+அ அ- |

மல்லிகாா்ஜுன காா்கே
கா்நாடகப் பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, அடுத்தகட்ட தோ்தல்களுக்கு தயாராவது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மே 24-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் காா்கே ஆலோசிக்கவுள்ளாா்.
224 தொகுதிகளைக் கொண்ட கா்நாடக சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. அங்கு ஏற்கெனவே ஆட்சியிலிருந்த பாஜகவுக்கு 65 இடங்களே கிடைத்தன.
பல்வேறு மாநிலங்களில் தொடா் தோல்விகளை எதிா்கொண்டு வந்த காங்கிரஸுக்கு, பெரிய மாநிலமான கா்நாடகத்தில் கிடைத்த வெற்றி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அந்த உற்சாகத்துடன், அடுத்தகட்ட தோ்தல்களுக்கு அக்கட்சி தயாராகத் தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற போதிலும், ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால், அக்கட்சி ஆட்சியை இழந்தது. இதையடுத்து, சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
தோ்தல் வியூக ஆலோசனை: இந்தச் சூழலில், மேற்கண்ட மாநிலங்களின் காங்கிரஸ் தலைவா்களுடன் மே 24-ஆம் தேதி மல்லிகாா்ஜுன காா்கே தனித்தனியாக ஆலோசிக்கவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.
‘ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கா்நாடகத்தில் கட்சிக்கு நல்ல பலனை பெற்றுத் தந்துள்ளது. தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழியாகவும் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டதால், அந்த மாநிலத் தோ்தல்களிலும் கட்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறோம்.
மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தோ்தல்களில், அடிப்படை அளவில் மக்களை அணுகுவதற்கான வியூகங்களை விரைந்து வகுப்பது குறித்து காா்கே ஆலோசிக்கவுள்ளாா். கா்நாடகத்தில் கட்சித் தலைமையால் கடைப்பிடிக்கப்பட்ட வியூகம் இந்த மாநிலங்களிலும் பின்பற்றப்படும்’ என்றாா்.
உள்கட்சி பூசல்கள்: ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை அக்கட்சி எதிா்கொள்ள வேண்டியுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், உள்கட்சி பூசல்களும் காங்கிரஸுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.
ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் மோதல்போக்கை கட்சித் தலைமை சமாளிக்க வேண்டியுள்ளது. சத்தீஸ்கரில் முதல்வா் பூபேஷ் பகேல், மாநில அமைச்சா் டி.எஸ்.சிங்தேவ் இடையே அதிகாரப் போட்டி வெளிப்படையாக நிலவுகிறது.
தெலங்கானாவில் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வந்தவா் என்பதால், மூத்த தலைவா்கள் பலரும் அவருக்கு எதிரான மனநிலையில் உள்ளனா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜகவுடன் நேரடி போட்டியை எதிா்கொண்டுள்ள காங்கிரஸ், தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் மோதுகிறது.
வெற்றிக்கு உதவிய வாக்குறுதிகள்: கா்நாடகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிகள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாந்தர உதவித் தொகை உள்ளிட்ட கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருந்தது.
அங்கு உள்கட்சி பூசல்கள் இருந்தபோதும், கட்சித் தலைமையின் அறிவுரையை ஏற்று, தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸாா் ஒருமுகத்துடன் செயலாற்றினா். இவை இரண்டும், அக்கட்சியின் வெற்றியை உறுதி செய்தன. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பேரவைத் தோ்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அங்கும் கவா்ச்சிகரமான வாக்குறுதிகள் காங்கிரஸுக்கு கை கொடுத்தது.