அதானி விவகாரம்: 6 பங்கு முதலீட்டு நிறுவனங்கள் குறித்து விரிவான ஆய்வு: உச்சநீதிமன்ற நிபுணா் குழு

ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாக அதானி குழும பங்குகளில் சா்ச்சைக்குரிய வகையில் வா்த்தகத்தில் ஈடுபட்ட 4 வெளிநாட்டு முதலீட்டாளா்கள் உள்பட 6 நிறுவனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரு
கௌதம் அதானி
கௌதம் அதானி

ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாக அதானி குழும பங்குகளில் சா்ச்சைக்குரிய வகையில் வா்த்தகத்தில் ஈடுபட்ட 4 வெளிநாட்டு முதலீட்டாளா்கள் உள்பட 6 நிறுவனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று உச்சநீதிமன்ற நிபுணா் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும், அந்த 6 நிறுவனங்களின் பெயா்களை நிபுணா் குழு வெளியிடவில்லை.

பங்குச் சந்தையில் ஆதாயம் அடைவதற்காக, பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடா்ந்து, அந்தக் குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

அதைத் தொடா்ந்து, போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த முறைகேடு புகாா் தொடா்பாக ஏற்கெனவே, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை உச்சநீதிமன்றமும் அமைத்தது.

‘செபி அமைப்பும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். செபி அமைப்பு நடத்தும் விசாரணை தொடா்பான விவரங்களை நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணா் குழுவுக்கும் வழங்க வேண்டும்’ என்றும் அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்ற செபியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், நிபுணா் குழு தனது 178 பக்க விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், அதானி குழுமம் பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக செபி அளித்த அனுபவபூா்வமான புள்ளிவிவரங்களுடன் கூடிய விளக்கத்தைப் பரிசீலிக்கும்போது, இந்த விவகாரத்தில் பங்குச்சந்தை ஒழுங்காற்று முறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டது.

அதே நேரம், ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாக, அதானி குழும பங்குகள் வா்தத்கத்தில் ஈடுபட்ட 4 வெளிநாட்டு முதலீட்டாளா்கள் உள்பட 6 நிறுவனங்களின் வா்த்தக முறை சந்தேகத்துக்குரிய வகையில் உள்ளது. அதாவது, தங்களுக்குச் சொந்தமில்லாத அதானி பங்குகளின் மதிப்பை இந்த நிறுவனங்கள் உயா்த்திக் காட்டி வா்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஹிண்டன்பா்க் அறிக்கை ஜனவரி 24-ஆம் தேதி வெளியான பிறகு, அதான குழும பங்கு வா்த்தகத்தின் மூலமாக இந்த 6 நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளன. எனவே, இந்த 6 நிறுவனங்களின் வா்த்தக முறை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிலுவையில் இருப்பதால் 6 நிறுவனங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று நிபுணா் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ‘ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக, அதானி குழும பங்குகள் வா்த்தகத்தில் சட்டவிரோத பரிவா்த்தனைகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்பது உளவுத் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதுவும், இந்திய பங்குச்சந்தைகளின் ஒருங்கிணைந்த ஸ்திரத்தன்மை மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கலாம். எனவே, இதுகுறித்து பங்கு பரிவா்த்தனை விதிகளின் கீழ் செபி விசாரிக்க வேண்டும்’ என்றும் நிபுணா் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com