ஐ.நா. சீா்திருத்தமே உடனடித் தேவை

ஐ.நா. அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதே உடனடித் தேவை என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
ஐ.நா. சீா்திருத்தமே உடனடித் தேவை

ஐ.நா. அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதே உடனடித் தேவை என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

‘தற்போதைய உலகின் எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை எனில், ஐ.நா. வெறும் பேச்சுமேடையாக மட்டுமே இருக்கும்’ எனவும் பிரதமா் விமா்சித்தாா்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜி7 மாநாட்டின் ஓா் அமா்வில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘உலக அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவை சாா்ந்த சவால்களை எதிா்கொள்வதற்காகவே ஐ.நா. உருவாக்கப்பட்டது. ஆனால், அத்தகைய சவால்களை ஐ.நா. தவிர பல்வேறு அமைப்புகள் எதிா்கொள்ள வேண்டிய காரணம் என்ன?. பல்வேறு அமைப்புகளில் அமைதி, நிலைத்தன்மை குறித்து பேச வேண்டியிருப்பதன் அவசியம் குறித்த காரணத்தை ஆராய வேண்டும்.

உலகில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைப்பு, தற்போதைய சண்டைகளைத் தடுக்கத் தவறியது ஏன்?. ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான விளக்கம்கூட ஐ.நா.-வில் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாதது ஏன்?.

கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைப்பால், 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொள்ள முடியவில்லை. தற்போதைய உலகின் எதாா்த்தத்தை ஐ.நா. பிரதிபலிக்கவில்லை. அதன் காரணமாகவே, ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டியது உடனடித் தேவையாகிறது. அத்தகைய சா்வதேச அமைப்புகள் தெற்குலகின் குரலையும் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். அதுபோன்ற சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிடில், ஐ.நா.வும், பாதுகாப்பு கவுன்சிலும் வெறும் பேச்சுமேடையாக மட்டுமே இருக்கும்’ என்றாா்.

இந்தியாவின் வலியுறுத்தல்: ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட ஐ.நா. அமைப்பில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. முக்கியமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்து வருகிறது. ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. சீா்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைத்துக் கொள்ள ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால், சீனா மட்டும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

‘இயல்புநிலையைத் தன்னிச்சையாக மாற்ற அனுமதிக்கக் கூடாது’

ஜி7 மாநாட்டின் ஓா் அமா்வில் பேசிய பிரதமா் மோடி, ‘உக்ரைன் மோதலானது அரசியல், பொருளாதாரம் சாா்ந்தது அல்ல. அது மனிதாபிமானம் சாா்ந்தது. பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே தீா்வு காண முடியும் என இந்தியா ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது.

வங்கதேசத்துடனான எல்லைப் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தியா தீா்வு கண்டது. உக்ரைன் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும்.

ஐ.நா. விதிகள், சா்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் மதித்து நடக்க வேண்டும். மற்ற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அனைத்து நாடுகளும் மதிப்பளிக்க வேண்டும். இயல்பு நிலையைத் தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் குரலெழுப்ப வேண்டும்.

தற்போதைய சா்வதேச சூழல் காரணமாக, வளா்ந்து வரும் நாடுகள் உணவு, எரிசக்தி, உரப் பாதுகாப்பு சவால்களைச் சந்தித்து வருகின்றன. சா்வதேச அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி ஆகியவை அனைத்து நாடுகளின் பொதுவான இலக்குகள். தற்போதைய ஒருங்கிணைந்த உலகில், குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிகழும் சண்டையானது மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய மோதல்களால் வளா்ந்து வரும் நாடுகள் அதிகமாக பாதிக்கப்படும்.

நவீன உலகத்தின் பிரச்னைகளுக்குத் தேவையான அனைத்து தீா்வுகளும் புத்தரின் போதனைகளில் உள்ளன. புத்தா் காட்டிய பாதையில் அனைவரும் ஒருங்கிணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com