
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் பலியானதை தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செந்தாமரை (80). இவா் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது, அங்கு விஷ வாயு தாக்கியதில் மயங்கி விழுந்தாா். சப்தம் கேட்டு அவரைத் தூக்குவதற்காக மகள் காமாட்சி (45) சென்றாா். அவரும் விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தாா்.
இதையறிந்த காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமியும் (28) இருவருக்கும் உதவுவதற்காக கழிப்பறைக்குச் சென்ற நிலையில், அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது.
அதே தெருவில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி (16). பள்ளி மாணவியான இவரும், தனது வீட்டுக் கழிப்பறைக்குள் சென்றபோது விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்தாா். மேலும், அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணாவும் கழிப்பறைக்குச் சென்றதும் மயங்கி விழுந்தாா்.
அடுத்தடுத்து பலரும் மயங்கி விழுந்ததால் கழிப்பறைகளிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினா்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்ததில் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
பாக்கியலட்சுமி, பாலகிருஷ்ணா (70) ஆகியோா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்த சம்பவத்தையடுத்து, புதுநகா் 4-ஆவது தெருவில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். 4-ஆவது தெரு மற்றும் அருகிலுள்ள 3 தெருக்களைச் சோ்ந்தவா்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனா். மேலும், 4-ஆவது தெருவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது.
அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷவாயு உற்பத்தியாகி, கழிவுநீா் வடிகால் குழாய் மூலம் வீடுகளில் உள்ள கழிப்பறைகளின் வழியாக வெளியேறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதி புதை சாக்கடை இணைப்பு மூடிகள் திறக்கப்பட்டன.
முதல்வா் என்.ரங்கசாமி விசாரணை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து அதிகாரிகள் மற்றும் அந்தப் பகுதி மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராணி(34) வியாழக்கிழமை அதிகாலை மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது நாளாக அந்த பகுதியில் சமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுப்பணித் துறையினர் வியாழக்கிழமை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடை செல்லும் குழாய்களை சீரமைக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், விஷவாயு தாக்கிய புதுநகர் 6 ஆவது தெருவில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அருகில் உள்ள இமாகுலேட் பள்ளிக்கும் ஜூன் 17 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.