
இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து பொருளாதார திறன் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து, இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்து வருகிறார்.
இலங்கை நீர் வழங்கல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், "அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உலக நீர்மன்றத்தில் பங்கேற்பதற்காக பாலியில் 2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். இன்று எலான் மஸ்க் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் மீட்பு, பொருளாதார திறன் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
தொலைதூர இடங்களுக்கு இணைப்பைக் கொண்டு வருவது, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு அடைதல் குறித்து தீவிரமாக உரையாடினர்" என்று கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் எலான் மஸ்க் பேசும் விடியோவையும் ஜீவன் தொண்டமான் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னதாக, எலான் மஸ்க் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 22 வரை இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசிநேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது.
"எதிர்பாராவிதமான பணிகளின் காரணமாக தங்களால் இம்முறை வருகை புரிய இயலவில்லை; ஆனால் இந்தாண்டின் பிற்பகுதியில் வரவிருக்கிறேன்" என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரையில், இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்கிற்கான தனது திட்டங்களை மஸ்க் அறிவிக்கவில்லை.
இந்தப் பயணத்தின் போது எலான் மஸ்க் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், அதன்மூலம் சுமார் 2-3 பில்லியன் டாலர் மின்சார வாகன உற்பத்தி வசதி மற்றும் நாட்டில் சில ஸ்டார்லிங்க் தொடர்பான முன்னேற்றங்கள் அடையலாம் என்றும், புதுதில்லியில் பல ஸ்டார்ட்அப்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.