மரங்களைக் காப்பாற்றுங்கள்!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையோர மரங்கள் வெட்டப்படுவது பற்றி...
tree cutting
வெய்யில் பாதை...
Published on
Updated on
2 min read

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின்  பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை  அகலப்படுத்துதல், மெட்ரோ ரயில் போன்ற வெவ்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டுவிட்டன; இன்னமும் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாகக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் அறிவுறுத்திவந்தபோதிலும், இவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை எவ்வளவு, எங்கெங்கே நடப்பட்டன, இவற்றில் எத்தனை மரங்கள் உயிர் பிழைத்தன? என்பது பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரண்டாவது முதன்மைச் சாலையில் தரிக்கப்பட்ட மரங்கள்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரண்டாவது முதன்மைச் சாலையில் தரிக்கப்பட்ட மரங்கள்.

சென்னையில் அபூர்வமாக சில பகுதிகளில்தான் நிறைய மரங்கள் இருக்கின்றன. இத்தகைய இடங்களில் அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளும் இடம் பெறுகின்றன.

நிழலுக்கு வெ(வே)ட்டு!
நிழலுக்கு வெ(வே)ட்டு!

இப்போது இந்தப் பகுதியிலுள்ள மரங்களுக்கும் ஆபத்து வந்திருக்கிறது. இரு நாள்களாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரண்டாவது முதன்மைச் சாலையில் ஒருபுறம் இருக்கும் மரங்கள் யாவும் தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சாலைப் பகுதிகளில் பரவியுள்ள கிளைகள் முழுவதுமாக வெட்டப்படுவதால் பல மரங்கள் பாதி மரங்களாகிவிட்டன.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரண்டாவது முதன்மைச் சாலையில் தரிக்கப்பட்ட மரங்கள்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரண்டாவது முதன்மைச் சாலையில் தரிக்கப்பட்ட மரங்கள்.

எப்போதோ, யாரோ நட்டுவைத்துவிட்டுப்போன இந்த மரங்களால் இவ்வளவு காலமாக சாலைகளிலும் சாலையோர நடைபாதைகளிலும் நடந்துசெல்வோருக்கு வசதியாக நல்ல நிழல் விழுந்துகொண்டிருந்தது. தற்போது நடைபாதைகள் முழுவதும் நல்ல (!) வெய்யிலடித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் இந்தப் பகுதிகளில் மரங்களுக்கு மேலேயோ, அருகிலேயேகூட மின்சார கம்பிகள்கூட செல்லவில்லை. பேருந்துகள், கனரக வாகனங்களில் உரசுகின்றன என்றால், குறிப்பிட்ட கிளைகளை மட்டுமேனும் அகற்றலாம். மாறாக, ஒரேயடியாக மரங்களில் பாதியை வெட்டுவதில் எவ்வித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று துயரப்படுகிறார்கள் நடைபாதைப் பயனாளர்கள்.

இந்த மரம் வெட்டும் பணி விரைவில் தொழிற்பேட்டையின் பிற பகுதிகளுக்கும், தொடர்ந்து இதைப் பார்த்துப் பிற தொழிற்பேட்டைகளுக்கும்கூட பரவும் ஆபத்து இருக்கிறது. இப்படியாக வெட்டப்படும் மரங்கள் சிலவேளை பட்டுப்போகும் அபாயமும் இருக்கிறது.

உடனடியாக, இவ்வாறு கோடு கிழித்தாற்போல மரங்களை, மரங்களின் கிளைகளைப் பாதிக்குப் பாதி வெட்டி அகற்றுவதற்குப் பதிலாகத் தேவையான அளவுக்கு மட்டும் தரித்துவிடலாம். மரங்களை வெட்டுவதற்கு மாநகராட்சியில் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன? எந்தளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன?

உயிருடன் கொல்வதைப் போன்றிருக்கும் இந்த மரம் வெட்டும் வேலையை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்? எப்போது? அதற்குள் மாநகரில் எத்தனை சாலைகளும் பாதைகளும் இனிப் பாலையாகக் காயப் போகின்றன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com