

டியூட் படத்துக்குச் சென்றவர்களை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் வெச்சு செஞ்சுட்டாரு.. என இயக்குநர் பா. ரஞ்சித் புகழாரம் சூட்டியுள்ளார்.
பைசன் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், டியூட் திரைப்படம் குறித்துப் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித், அதிதி ஆனந்த், சமீர் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பைசன் படத்தின் வெற்றி விழா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நேற்று (அக். 25) நடைபெற்றது.
இதில் இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது,
''எப்போதுமே தமிழ் சினிமாவை சீரழிக்கிறார்கள் என்று என் புகைப்படத்தை வைத்துத்தான் திட்டுவார்கள். இப்போதேல்லாம் மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் புகைப்படங்களையும் சேர்த்துவிட்டார்கள்.
எங்கு பார்த்தாலும் எங்கள் மூன்று பேரின் புகைப்படங்கள் இருக்கின்றன. நாங்கள் சினிமாவை சீரழித்தோம் என்று எங்களையே திட்டுகிறார்கள். மற்ற பெரிய படங்கள் ஏதெனும் ஹிட் அடித்தால், எங்களைத்தான் திட்டுவார்கள். இப்போது காந்தாரா படம் வந்தபோதும் திட்டினார்கள்.
தமிழ் சினிமாவில் ஓராண்டில் 200 - 300 படங்கள் வெளியாகின்றன. நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தையே இயக்குகிறோம். மாரி செல்வராஜ் இதுவரை 5 படங்களைத்தான் கொடுத்துள்ளார். ஆனால், ஐந்து படங்களுமே வெற்றிப் படங்கள்.
2 ஆண்டுகளில் 600 படங்கள் வெளியாகின்றன. அவற்றை பல்வேறு இயக்குநர்கள் இயக்குகிறார்கள். தமிழ் சினிமாவை உயர்த்துவதில் அவர்களுக்கு பங்கு இல்லையா? தமிழ் சினிமாவை உயர்த்த அவர்கள் எந்தப் படத்தையும் இயக்குவதில்லையா?
கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 7 படங்களை மட்டுமே நான் இயக்கியுள்ளேன். அந்த 7 படங்கள் தமிழ் சினிமாவை சீரழித்துவிட்டதா? பைசன் படம் நன்றாக இல்லை டியூட் படத்துக்குச் செல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால், டியூடுக்குச் சென்றவர்களை அந்த இயக்குநர் 'வெஞ்சி செஞ்சிட்டாரு' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதிப் பெருமை, பழமைவாதம் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டியூட் படம் இருந்ததாக மறைமுகமாக இயக்குநர் பா.ரஞ்சித் புகழ்ந்துள்ளார். இதனையே வெச்சி செஞ்சுட்டாரு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.