ஜல்லிக்கட்டு விசயத்தில் கிளைமாக்ஸ் என்ன? ஜெயிக்கப் போவது யார்?

தமிழகத்தைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டு தீவிர அரசியலாக்கப் பட்டு விட்டது கண்கூடான உண்மை. ஆனால் இந்த அரசியலில் ஜெயிக்கப்போவது யார்? என்பதைத் தெரிந்து கொள்வது தானே பரபரப்பான கிளைமாக்ஸாக இருக்க முடியும்.
ஜல்லிக்கட்டு விசயத்தில் கிளைமாக்ஸ் என்ன? ஜெயிக்கப் போவது யார்?

தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், கட்டிகுளம், பாலமேடு உள்ளிட்ட பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் தடையை அலட்சியப்படுத்தி இவ்விதமாக ஜல்லிக்கட்டு நடத்துவோர் ஆங்காங்கே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டு தடை விசயத்தில் ஆரம்பத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப் படும் என ஆதரவு தெரிவித்துப் பேசினார் தமிழக முதல்வர், ஆனால் அவரது தலைமையில் இயங்கும் தமிழக காவல்துறையினர் முதல்வரின் வாக்குறுதிக்கு முரணாக தற்போது தடையை மீறியவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என ஜல்லிக்கட்டில் ஆர்வமுள்ள மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் மேற்கண்ட இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்பாட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்; 

“ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப் படுவதாக வீடியோ ஆதாரங்களைக் காட்டி உச்சநீதிமன்றத்தில் விவாதித்துத் தான் பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு தடை ஆணையைப் பெற்றிருக்கிறது. அப்படியான சூழலில் உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தடையை அலட்சியப் படுத்தி சில இடங்களில் ஜல்லிக் கட்டு நடத்தப் படும் காட்சிகளையும், காவல்துறையினரின் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களையும் வீடியோ பதிவுகளாக உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து பீட்டா அமைப்பு மேலும் கடுமையாக ஜல்லிக்கட்டுக்கு எதிரான தங்களது வாதத்தை வைக்கும். இதனால் ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடர்ந்து நீட்டித்துக் கொண்டே செல்லும் அபாயம் தான் நேரும். மக்கள் தங்களது எதிர்ப்பை இப்படி வெளிப்படுத்தக் கூடாது” எனும் ரீதியில் நீள்கிறது அமைச்சரின் விமானநிலைய செய்தியாளர் உரையாடல். முடிவாக ‘தமிழ்நாட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு எதுவும் நடத்தப் படவில்லை எனவும், மக்கள் தங்களது எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் போராட்ட உணர்வின் வெளிப்பாடே இந்த ஆர்ப்பாட்டங்களும், காவல்துறை கைதுகளும்’ என்பதாக மத்திய அமைச்சர் தீர்மானமாகக் கருத்துச் சொல்லி விசயத்தை முடித்து விட்டார்.

மத்திய அரசாகட்டும், தமிழக அரசாகட்டும் இரண்டுமே ஜல்லிக்கட்டை தங்களது அரசியல் ஆதாயம் தாண்டிய ஒரு நிகழ்வாகக் கருதவில்லை என்ற உண்மை இதிலிருந்து புலனாகிறது. மேலும் இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்களும், பொதுமக்களும், திரைத்துறையினரும் கூட தங்களது அன்றாட அலுவல்களை கிடப்பில் போட்டு விட்டு இன்னும் எத்தனை நாட்கள் போரட முடியும்?  இன்று காணும் பொங்கல், விடுமுறை தினம். ஜல்லிக்கட்டுக்காக இன்று ஒருநாள் இந்தப் போரட்டங்கள் நீடிக்கலாம். ஊடகங்களைப் பொறுத்த வரை ஜல்லிக்கட்டை விடப் பரபரப்பான வேறொரு விசயம் கிடைத்தால் அதை நோக்கி அவர்களின் கவனம் திரும்பி விடும். அப்புறம் ஜல்லிக்கட்டு பிரச்சினை கோமா நிலைக்குப் போய்விடும். மீண்டும் அது புத்துயிர் பெற்று எழ அடுத்த பொங்கல் வரை காத்திருப்போம் நாம். 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டு தீவிர அரசியலாக்கப் பட்டு விட்டது கண்கூடான உண்மை. ஆனால் இந்த அரசியலில் ஜெயிக்கப்போவது யார்? என்பதைத் தெரிந்து கொள்வது தானே பரபரப்பான கிளைமாக்ஸாக இருக்க முடியும். ஊடகச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் பாலிவுட் நடிகர் சல்மான் கான் போதையில் காரோட்டிச் சென்று நடைபாதை மனிதர் ஒருவரைக் கொன்ற வழக்கில் கூட இரவோடு இரவாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விசயத்தில் மட்டும் ஏன் இத்தனை கால தாமதம் செய்கிறது? என்பது தான் மக்களிடையே புரியாத புதிராக இருக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது கூட இந்தியர்களின், குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பிராந்தியக் கலாச்சாரப் பின்பற்றல்களின் மீது இந்த அளவுக்கு அத்துமீறல்களோ, தடைகளோ ஏற்பட்டதில்லை. ஆனால் இப்போது விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சில மோசமான பிழைப்புவாத என்.ஜி.ஓக்கள், தமிழக மக்களின் மனதைப் புண்படுத்தி வருவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? மிருகவதைக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு பீட்டா இப்போது செய்து கொண்டிருப்பது மனிதவதை! 

இதோ பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான ஆதார வீடியோ.


 
பன்னாட்டு வணிக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து ‘டொனேஷன்’ எனும் பெயரில் நிதி உதவி பெறுவதற்காகத் தான் ஜல்லிக்கட்டை இத்தனை தீவிரமாக பீட்டா எதிர்க்கிறது என்பதான குற்றச்சாட்டு ஒன்று அதன் மீது அதன் எதிர்பாளர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் இயங்கும், எல்லாவற்றிலும் ஆதாயம் தேடும் பேராசைத் தனம் கொண்ட சில என்.ஜி.வோ அமைப்புகளுக்கு இங்கிருக்கும், வறுமை, சுகாதாரமின்மை, பாலியல் வன்முறைகள், மதப் பிரச்சினைகள், இனப் பாகுபாடுகள், ஆன்மீகம் முதலிய எல்லாவற்றையும் அரசியலாக்கி காசாக்கும் வித்தை தெரிந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் என்று தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அவர்கள் தாம் கற்றுக் கொண்ட வித்தைகளை அவ்வப்போது பரிசீலித்துப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் மக்கள் இவற்றை உணர்வதே இல்லை.

இப்போதும் கூட ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறைச் சலுகைகள், பாரம்பரிய அடையாளங்கள் இப்படி ஒவ்வொன்றாகத்  தங்களது அடிப்படை அடையாளங்களை இழக்க நேருமோ எனும் அச்சத்தினால் தான் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முன் வந்திருக்கிறார்களே தவிர பீட்டாவுடன் போராடுவது அவர்களின் நோக்கம் அல்ல, அது அவர்களது வேலையும் அல்ல!

மக்களின் தார்மீகக் கோபங்கள் எல்லாம். எங்கள் ஊரில், எங்கள் பாட்டனார், முப்பாட்டனார் காலத்தில் மட்டுமல்ல அதற்கும் முன்பிருந்தே சங்க காலத்திலிருந்து நாங்கள் பின்பற்றி வரும் ஒரு பாரம்பரியக் கேளிக்கையை, கலாச்சார அடையாளத்தை பீட்டா அமைப்பு கொச்சைப் படுத்துவதோடு வருடந்தோறும் மீண்டும், மீண்டும் கொண்டாட்ட மனநிலையைக் கெடுக்கிறதே என்பது தான். மேலும் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இம்மாதிரியான விசயங்களில் எல்லாம் காலம் கடத்திக் கொண்டிராமல் உச்சநீதிமன்றம் உடனடியாக, இருதரப்பு விவாதங்களையும் மீளக் கேட்டு உரிய தீர்ப்பை வழங்க வேண்டும், அப்படி வழங்கினால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.  இல்லையேல் கச்சத்தீவு விசயத்தைப் போல ஜல்லிக்கட்டுக்காகவும் நாம்  வருடக்கணக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை வந்து விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com