Enable Javscript for better performance
if she is a sex worker vs spine |பாலியல் தொழிலாளி என்றால் அவர்களுக்கு முதுகெலும்பே இருக்கக் கூடாதா?- Dinamani

சுடச்சுட

  

  பாலியல் தொழிலாளி என்றால் அவர்களுக்கு முதுகெலும்பே இருக்கக் கூடாதா?

  By RKV  |   Published on : 26th April 2017 02:52 PM  |   அ+அ அ-   |    |  

  mega_serial

   

  இரு தினங்களுக்கு முன்பு இரவு சாப்பாட்டு நேரத்தின் போது, ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்போதாவது தான் ரிமோட் நம் கையில் சிக்கும் என்றாலும், அன்று ரிமோட் கிடைத்தும் சேனல் மாற்ற வகையில்லாமல் போனது. எனவே அந்த நெடுந்தொடரின் ஆதி, அந்தம் எதுவும் தெரியாத போதும் பார்க்கத் தொடங்கினேன். நம்மைக் கடப்பவை எவையும் நமது கட்டுப்பாட்டில் இல்லை எனும் தத்துவத்தின் படி தொடர் அது பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் காட்சிச் சித்தரிப்பு தான் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனக்கு மட்டுமா அல்லது அப்படியான ஒரு காட்சியைக் கண்டு களித்த எல்லோருக்குமே அப்படித்தான் இருந்ததா என்பதை இந்த நெடுந்தொடரை அன்று பார்க்க வாய்த்தவர்கள் அனைவரும் அவரவர் தங்களுக்குள் ஒரு முறை கேட்டுக் கொள்வது நலம். ஏனெனில் இந்த ஒரு நெடுந்தொடரில் மட்டுமல்ல, சின்னத்திரை நெடுந்தொடர்கள் பலவற்றிலும் இது ஒரு டிரெண்டாகத் தான் பரவிக் கொண்டிருக்கிறதோ என்று ஒரு ஐயம் உண்டாகிறது. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாகக் காட்டப்படும் போது அவளுக்கு முதுகெலும்பே இருக்கக் கூடாது என்று யார் சட்டமியற்றினார்களோ தெரியவில்லை?! 

  ஓவர் டு த சீன்...

  காட்சிப்படி மோசமான இன்ஸ்பெக்டரால் வஞ்சிக்கப்பட்ட இளம் பெண்ணொருத்தி, இரவில் புகழிடம் தேடி தனது தோழியை அணுகுகிறாள், தோழி சூழலைக் காரணம் காட்டி; தான் தற்போது ஒரு பாலியல் தொழிலாளியாக இருப்பதாகக் கூறுகிறாள். அவள் அப்படி இருந்தாலும் கூட இவளுக்கு உதவத் தயங்கவில்லை. நீ என்னுடன் தங்கலாம், என்னைத் தேடி வரும் நபர்களால் உனக்கு தொந்திரவு இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றவாறு அவளை உடன் தங்க வைக்கிறாள். அந்த நேரத்தில் அவளைத் தேடி ஒரு ஆண் வருகிறான். அவனை வரவேற்கும் பாலியல் தொழிலாளி, தோழியை உறங்குமாறு சொல்லி விட்டு அவனுடன் வேறு ஒரு அறைக்குள் சென்று விடுகிறாள். இதே நேரத்தில் அவளைத் தேடி மற்றொரு ஆணும் வர இப்போது உள்ளிருப்பவனுக்கும், புதிதாக வந்தவனுக்கும் இடையில் யார் அந்தப் பெண்ணுடன் நேரம் கழிப்பது என்பது குறித்து பலத்த வாக்குவாதம் வருகிறது. தங்களது பாலியல் தேவைகளுக்காக இப்படி ஒரு இடத்துக்கு இரு ஆண்கள் வருகையில் இடையில் ஒரு இளம்பெண் அதே இடத்தில் இருந்தாள் அவள் கதி? ஆமாம் வந்தவனுக்கு அவள் தேவைப்பட வாக்குவாதம் மேலும் முற்றுகிறது. இதற்கிடையிலான வசனம்; 

  பாலியல் தொழிலாளி: இப்போது வேறுஒரு கஸ்டமர் இருப்பதால், நீங்கள் இப்போது போய்விட்டு நாளை வாருங்கள்;

  ஆண்: நீ சொல்லும் நேரத்தில் எல்லாம் நான் வர முடியாது. நான் கூப்பிடும் போது நீ வர வேண்டும்.

  பாலியல் தொழிலாளி: நான் என்ன உன் மனைவியா நீ கூப்பிடும் போது வர, அப்படியெல்லாம் வரமுடியாது, நீ போ இப்போது வேறு கஸ்டமர் இருக்கிறார்.

  இதற்கிடையில் வாக்குவாதம் செய்த ஆணின் கண்ணில் காத்திருக்கும் தோழி பட;

  ஆண்: நீ வரா விட்டால் போ, இதோ இவள் இருக்கிறாளே. இவள் போதும்.

  பாலியல் தொழிலாளி பயந்து போய்:

  அவள் என் தோழி. வேலை தேடி இண்டர்வியூ செல்வதற்காக இங்கே என்னுடன் தங்கி இருக்கிறாள். அவள் என்னைப் போல அல்ல; 

  இதற்கிடையில் அறைக்குள் காத்திருந்த ஆண் வருகிறான். 

  காத்திருந்த ஆண்: எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது. இப்போது வரப்போகிறாயா? இல்லையா?

  வாக்குவாதம் செய்யும் ஆண்: அவள் என்னுடன் தான் வருவாள். நீ போ 

  காத்திருந்த ஆண்: என்ன நான் போக வேண்டுமா? அவள் என்னுடன் தான் வருவாள் நீ போ

  இரு ஆண்களும் அந்தப் பாலியல் தொழிலாளியாக நடித்த பெண்ணின் கைகளை இருபுறமும் பற்றிக் கொண்டு இழுத்து சண்டையிட;

  நடுவில் இருவர் பார்வையும் காத்திருந்த தோழியிடம் செல்கிறது.

  முடிவில் இருவருமே அந்தப் பெண்ணுக்காக சண்டையிடத் தொடங்கி கடைசியில் அக்கம் பக்கத்தவர் புகார் அளிக்க வீட்டுக்கு காவல்துறை வந்து நிற்கிறது.

  இதில் என்ன இருக்கிறது. வழக்கமாக எல்லா நெடுந்தொடர்களிலும் இப்படி ஒரு காட்சி வரத்தானே செய்கிறது என்பீர்களானால். உங்களுக்கு இப்படியான காட்சிகள் சிந்தைக்குப் பழகி விட்டது என்று அர்த்தம். இதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு முதலில் பெண்களுக்குத் தான் வர வேண்டும். 

  ஏனெனில் இந்த நெடுந்தொடரில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக எல்லா நெடுந்தொடர்களிலும் ஒன்று பெண்ணை மிக அப்பாவியாக, குட்டக் குட்டக் குனியும் தன்மை கொண்ட  பணிந்த பெண்ணாகக்  காட்டுவது, அல்லது வன்முறையின் எந்த எல்லைக்கும் சென்று கொலை கூட செய்யத் தகுந்த கொடூர வில்லியாகச் சித்தரிப்பது. இந்த இரண்டே இரண்டு வகைப் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு தங்களின் நெடுந்தொடர்களைத் டி.ஆர்.பி ரேட்டிங்கில்  தூக்கி நிறுத்த. அது தனிப் பஞ்சாயத்து. அதைப் பற்றியும் பிறிதொரு சமயம்  பேசியாக வேண்டும். இப்போது இந்த நெடுந்தொடர் சித்தரிப்புக்கு வருவோம்;

  ஒரு பெண் அவள் பாலியல் தொழிலாளியே ஆனாலும் தன்னிடம் வரும் ஆண்களைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது யாருக்கு முன்னுரிமை தருவது என்பது குறித்தான முடிவெடுக்கவோ அவளுக்கும் உரிமை இருக்கிறது தானே?! பார்வையாளர்களிடம் கருணை ஏற்படுத்துகிறோம் என்ற மனப்பாங்கிலோ அல்லது ஆண் இப்படித்தான் இருப்பான் எனும் மனப்பாங்கிலோ நெடுந்தொடர்களில் இப்படியான காட்சி சித்தரிப்புகள் வைப்பதெல்லாம் அந்தத் தொடரை பார்க்க வாய்ப்பவர்களுக்கு கடும் எரிச்சலை உண்டாக்குவதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?  குறிப்பிட்ட அந்த நெடுந்தொடரில் பெண்கள் இருவருமே சண்டையிடும், தங்களை வற்புறுத்தும் ஆண்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்களாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும். இன்றைய பெண்கள் அப்படித் தான் இருக்கிறார்கள் என்று வலியுறுத்தும் முயற்சியா இது?!

  மனைவியே ஆனாலும் அவளது சுய விருப்பமின்றி கணவனின் ஆசைகளுக்கு இணங்க வேண்டியதில்லை என்கிறது சட்டம். ஆனால் பாலியல் தொழிலாளிகளை மட்டும் ‘காசு கொடுத்திருக்கிறேன் நீ இப்போது எனது அடிமை’ என்பது போல  ஆண்கள் அணுகுவதான இப்படியான காட்சியமைப்புகள் தேவையா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai