கரோனா கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடம்: அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்

கரோனா பாதிப்பு காரணமாக 6 மாதங்களாக வேலையிழந்து அன்றாட தேவைக்கே அல்லல்படும் நிலை உள்ளதால், பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க தொடங்கியுள்ளனர்.
கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கு.ரமாராணி முன்னிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்.  
கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கு.ரமாராணி முன்னிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பெற்றோர்.  


ஈரோடு: கரோனா பாதிப்பு காரணமாக 6 மாதங்களாக வேலையிழந்து அன்றாட தேவைக்கே அல்லல்படும் நிலை உள்ளதால், பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க தொடங்கியுள்ளனர்.
 
கரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் படிப்படியாக நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை. வேலை இருந்தாலும் கடந்த காலத்தில் கிடைத்த ஊதியம் கிடைக்கவில்லை. தவிர இன்னும் பொது போக்குவரத்து தொடங்காததால் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்ற பெண்கள் ஏறத்தாழ 30 சதவீதம் பேர் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் குடும்பத்தின் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தினக்கூலிக்கு செல்பவர்களும் குழந்தைகளை ஏதாவது ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர். இப்பள்ளிகளில் முதல் வகுப்பிற்கே ஆண்டுக்கு ரூ.20,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலை, கரோனா அச்சம் தணிந்து எப்போது இயல்பு நிலை திரும்பும் என்றே தெரியாத சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்பு நடத்துவதாக கூறி தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கேட்டு பெற்றோரை துன்புறுத்தி வருகின்றன.

இந்த சூழலில் நடுத்தர வருவாய் குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தொடங்கியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியாதாவது:

சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு:  ஈரோடு எஸ்.கே.சி.சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.சுமதி: இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சியில் மாற்றம் ஏதும் இல்லை. பெற்றோரை தேடிச்சென்று குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள் என்று கூறி வருகிறோம். அதே சமயம் சிலர் மெட்ரிக் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இருந்து இங்கு வந்து குழந்தைகளை சேர்த்துள்ளனர்.  
தனியார் பள்ளிகளை காட்டிலும் எங்கள் பள்ளி வசதியில் எந்தவிதத்திலும் குறைந்ததில்லை. இதை நாங்கள் பல ஆண்டுகளாக பெற்றோரை தேடிச்சென்று கூறினாலும் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்காது. தவிர தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஓரிருவரை கூட பார்க்க முடியாது. ஆனால் இந்த ஆண்டில் வெவ்வேறு வகுப்புகளில் தனியார் பள்ளிகளில் இருந்து வந்து சேர்ந்துள்ளனர்.

நடுத்தர குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள சூழலில், தனியார் பள்ளிகள் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.  குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தொடங்கியுள்ளனர்.  கரோனா சூழல் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் அரசுப்பள்ளிகளுக்கு நல்ல பலனையே அளித்துள்ளது என்றார்.

நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவருக்கு புத்தகப்பையை வழங்குகிறார் பள்ளி தலைமை ஆசிரியர் புவனா.  

இரண்டு நாள்களில் 50 புதிய மாணவர்கள்:  கோபி வட்டம், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கு.ராமாராணி: எங்கள் பள்ளி பொன் விழா கண்ட பள்ளி.  இப்பகுதியில் உள்ள பல தனியார் பள்ளிகளை விட எங்கள் பள்ளி கட்டமைப்பில், கற்பித்தலில் சிறந்த பள்ளி என்பது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியும். ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வருவார்கள். இந்த ஆண்டில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் வந்துள்ளனர்.  இரண்டு நாள்களில் சுமார் 50 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான். தனியார் பள்ளிகளில் இல்லாத வசதிகள் கூட எங்கள் பள்ளியில் உள்ளது. இதனால் எங்கள் பள்ளியில் சேருங்கள் என எங்கள் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 3 மாதங்களாக பெற்றோர்களை சந்தித்து வலியுறுத்தினோம். இந்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.

பெற்றோர்களின் நம்பிக்கை:   மாணவர் சேர்க்கை குறித்து பவானி வட்டம் க.ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.வாசுகி கூறியதாவது: மழலையர் வகுப்பை தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகள் பலர் எங்கள் பள்ளியில் 1 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். னியார் பள்ளிகளில் இருந்து வகுப்புக்கு 10 மாணவர்களாவது புதிதாக சேர வாய்ப்புள்ளது.

பெற்றோருக்கு கரோனா கற்றுதந்த வாழ்க்கை பாடத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்ற போதிலும், எங்கள் மீதான மக்கள் நம்பிக்கை காரணமாக பள்ளியில் இருந்து 7 கி.மீ தொலைவில் இருந்து கூட வந்து பெற்றோர் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர்.  எங்கள் மீது பெற்றோர் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக எங்கள் பள்ளி ஆசிரியர்கள் செயல்பாடு இருக்கும் என்றார்.

பெற்றோருக்கு பள்ளியை காட்டினோம்:  மாணவர் சேர்க்கை குறித்து மொடக்குறிச்சி வட்டம், நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி கூறியதாவது: கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர் தனியார் பள்ளிகள் படிக்கும் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதற்காக வீடு, வீடாக சென்று பெற்றோரை சந்தித்து பேசி வருகிறோம். எங்கள் பள்ளியின் சூழலை நேரில் வந்து பார்க்குமாறு பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருகிறோம். எங்கள் பள்ளியில் உள்ள வசதிகளை நேரில் பார்த்த பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளை இங்கு வந்து சேர்த்துள்ளனர் என்றார்.

ஆசிரியர்களுக்கும் ஆர்வம் வேண்டும்:   இதுகுறித்து சமூக அக்கறை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஏறத்தாழ 70 சதவீத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே உள்ளது. இதனை பல ஆசிரியர்கள் உணரவில்லை. பள்ளிகள் மூடப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை. சில ஆசிரியர்கள் தனிப்பட்ட ஆர்வத்தில் அரசுப்பள்ளிகளை தாங்கிப்பிடித்து வருகின்றனர். 

பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையே, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே கற்பித்தலை தாண்டிய நல்ல உறவு இருக்க வேண்டும்.  ஆசிரியர் மீது பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்பட்டால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். இதனை ஆசிரியர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com