சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் கடும் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக செங்கல் உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தம்மம்பட்டியில் மழையால் தார்ப்பாய்களால் மூடப்பட்டுள்ள செங்கல் சூளை.
தம்மம்பட்டியில் மழையால் தார்ப்பாய்களால் மூடப்பட்டுள்ள செங்கல் சூளை.


தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக செங்கல் உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்தில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வீரகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 160க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும், சேலம் மாவட்டம் முழுவதும் 1200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும் இயங்கி வருகின்றன.

இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் செங்கற்கள் சேலம் மாவட்டம் மட்டுமன்றி, அருகில் உள்ள பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு,திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு என வெளி மாவட்டங்களுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இத் தொழிலில் மாவட்டம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு ரூ. 300 முதல் ரூ. 800 வரையிலும் கூலி வழங்கப்படுகிறறது. குறிப்பாக இதில் சில சூளைகளில், செங்கல் அறுப்பவர்களுக்கு கூலியுடன் சாப்பாடும் உரிமையாளர்களால் வழங்கப்படுகிறது.

மேலும் செங்கற்களை உற்பத்தி செய்திட தேவையான தண்ணீர்,விறகுகள் விநியோகிப்பவர்கள் ஏராளமானோர் இத்தொழிலுக்கு உதவியாகவும், ஆதாரமாகவும் உள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ள செங்கல் சூளைத் தொழில் ஆயுத பூஜைக்குப் பின்னர் கடந்த 25 நாள்களுக்கு மேலாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

அக்டோபரில் ஆயுத பூஜைக்குப் பின்னர் அனைத்து ஊர்களிலும் செங்கற்களை வாங்குவது முற்றிலும் சரிந்துவிட்டது. அதற்கு முழுக் காரணம் ஆயுதபூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வந்ததால், செங்கல் சூளைகளில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் அனைவரும் தொடர் விடுப்பு எடுத்துக் கொண்டனர். இதனால் சூளைகளில் செங்கல் உற்பத்தி செய்ய முடியாமல் உரிமையாளர்கள் தவித்தனர்.

தம்மம்பட்டியில் மழையால் தார்ப்பாய்களால் மூடப்பட்டுள்ள செங்கல் சூளை.

இதுகுறித்து தம்மம்பட்டியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை நடத்தி வரும் பிரசாத்குமார் கூறியதாவது:

பண்டிகைகளுக்கு தொழிலாளர்கள் விடுப்பு எடுத்ததால், புதிதாக செங்கல் உற்பத்தி செய்ய முடியவில்லை. சூளையில் ஏற்கனவே விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கும் செங்கற்களையும் எங்களால் விற்பனை செய்யமுடியவில்லை. இதற்குக் காரணம், கட்டுமானத் தொழிலாளர்களும் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளை கொண்டாட வீடுகளுக்கு சென்று விட்டனர். அவர்கள் வேலைக்கு வராததால் கட்டுமானப்பொருள்களில் ஒன்றான செங்கற்கள் விற்பனையாகவில்லை. கட்டுமானப் பணிகள் 80 சதவீதத்திற்கு மேல் தற்காலிகமாக நின்றுவிட்டன. இதனால் செங்கற்களை விற்க முடியவில்லை. கட்டுமானப் பணி உரிமையாளர்களும் தீபாவளி முடியட்டும் என விட்டுவிட்டனர்.

தீபாவளிக்குப் பின் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.சென்னை போன்ற பெரு நகரங்களில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் தீபாவளிக்காக ஊர்ப்பக்கம் வந்துவிட்டு தொடர் மழையால் திரும்ப செல்லாமல் சொந்த ஊரிலேயே இருந்து விட்டனர். தீபாவளிக்குப் பிறகு கட்டுமானத் தொழிலாளர்கள், தொழில் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கினாலும், தொடர்மழையால் செங்கற்களை எங்களால்  உற்பத்தியும் செய்ய முடியவில்லை; விற்கவும் முடியவில்லை. 

சூளைகளில் தார்ப்பாய்கள்போட்டு மூடிவைத்துள்ளோம். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாத மழைக்காலங்களில் செங்கல் உற்பத்தி இல்லாமல் இருப்பது வழக்கமாக இருந்தாலும்,செங்கல் ஒன்றின் விலை வழக்கத்தைவிட கூடுதலாக விற்பது இருக்கும். ஆனால் இந்த ஆண்டு,மழைக்காலத்தில் செங்கற்களை வாங்குவோரும் இல்லை. அதனால், இருக்கும் செங்கற்களை விற்கவும் முடியவில்லை, கூடுதல் விலைக்கும் விற்க இயலவில்லை. மழையால் இப்போது இருக்கும் விலையைக் குறைத்து விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆயிரம் செங்கற்கள் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றார் அவர்.

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளும்,தொடர் மழையும் ஒரே காலகட்டத்தில் வந்ததால் செங்கல் சூளைகளுக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. தொடர் மழை நின்று,வெயில் அடிக்கத்தொடங்கி பத்து நாள்களுக்கு பிறகே செங்கல்சூளைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com