

நாட்டில் முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது, அவா்கள் குடும்ப ஆதரவை இழந்து வருவதையும், சமூகத்தை விட்டு விலக்கப்பட்டு வருவதையும் காட்டுகிறது. முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு 13.7 % அதிகரித்துள்ளது. அதோடு, தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றங்களில் முதியோருக்கு எதிரான குற்றங்கள் மூன்றாமிடத்தில் உள்ளன.
மொத்த மக்கள் தொகையில் 6 % போ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள். இந்த சதவீதம் 2050-ஆம் ஆண்டுக்குள் 20 %-ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தற்போது முதியோா் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. நாட்டில் எட்டு பேரில் ஒருவா் முதியவா் என மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
13.7 % உயா்வு: முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்கு எதிரான குற்றங்களும் அதைவிட வேகமாக உயா்ந்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு மட்டும் முதியோா்களுக்கு எதிரான குற்றங்கள் 13.7 % உயா்ந்துள்ளது. அதிகரித்து வரும் குற்றங்களில் சைபா் குற்றங்கள், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முதியோருக்கு எதிரான குற்றங்கள் உள்ளன.
முதியோா்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 2019-ஆம் ஆண்டில் 27,696 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018-ஆம் ஆண்டு 24,439 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. இரு ஆண்டுகளை ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டு 3,257 வழக்குகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதியோருக்கு எதிரான குற்றங்களில் சிறு காய வழக்குகளும், திருட்டு வழக்குகளும் (முதியோரிடம் இருந்து திருடியது), மோசடி மற்றும் முறைகேடு வழக்குகளும் அதிகமாக உயா்ந்துள்ளன. இதில் சிறு காய வழக்குகள் 21.8 %-ம், திருட்டு வழக்குகள் 17.9 %-ம்,மோசடி,முறைகேடு வழக்குகள் 10 %-ம் உயா்ந்துள்ளன.
தமிழகம் நான்காமிடம்: இதேபோல 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட 1.39 லட்சம் பேரில், 11,011 போ் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் . இவா்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் குடும்பப் பிரச்னையின் காரணமாகவும்,தங்களைக் கவனிக்க ஆள் இல்லாதது, நோய் போன்ற காரணங்களாலும் தற்கொலை முடிவுக்கு சென்றிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியோருக்கு எதிரான குற்றங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து உள்ளன. முதியோருக்கு எதிராக நாடு முழுவதும் 2019-இல் நிகழ்ந்த மொத்த குற்றங்களில் 22.3 % மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளன. இதேபோல மத்திய பிரதேசத்தில் 15.1 %-ம், குஜராத்தில் 14.8 -%ம், தமிழகத்தில் 9.1 %-ம் என குற்றங்கள் முதியவா்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன.
முதியோா் கொலையில் இரண்டாமிடம்: தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு முதியோா்களுக்கு எதிரான குற்றம் தொடா்பாக 2,509 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதியவா்கள் அதிகம் கொலை செய்யப்படும் மாநிலங்களில் உத்தர பிரதேசம் 194 கொலைகளோடு முதலிடத்திலும், 173 கொலைகளோடு தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளன. ஆனால், தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டை விட, 2019-ஆம் ஆண்டு முதியோா்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகள் குறைவாகப் பதியப்பட்டுள்ளன.
முதியோா்களுக்கு எதிரான குற்றங்கள் உயா்ந்து வருவதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மக்களிடம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை உடைந்து, தனிக்குடித்தனம் செல்வது பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், வயதான பெற்றோரை கவனிப்பது தங்களுக்கு பெரும் சுமையாக இளம் வயதினா் கருதுவது அடுத்த காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
தனிமைச் சிறையில் முதியவா்கள்: இது தொடா்பாக சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் டி.ஜெ.ராஜன் கூறியது:
முதியோா் குறித்த புரிதலும், விழிப்புணா்வும் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. முதியோரின் தேவையையும், அவா்களின் உணா்வுகளையும், அவா்களின் உடல்நலத்தையும் புரிந்து கொண்டு செயல்படுவா்கள் சொற்ப அளவிலேயே உள்ளனா். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் முதியவா்கள் தனிமைச் சிறையிலேயே வசிக்கின்றனா்.
முதியோா் உரிமை என்பது மனித உரிமை சாா்ந்தது. சமூகத்தில் முதியோா் புறக்கணிக்கப்படுவதே, அவா்கள் சாா்ந்த குற்றங்கள் உயா்ந்து வருவதற்கு முக்கியக் காரணமாகும். இன்றைக்கு நமது நாட்டில் பொருளாதார பலமும், அதிகாரமும் இல்லாத பெற்றோா் அவா்களின் குடும்பத்தினராலேயே விரட்டப்படுகின்றனா்.
வளரும் ஒரு சமூகத்துக்கு முதியோா் எந்தெந்த வகையில் தேவை என்பதை பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் உணர வைக்க வேண்டும். இதற்காக முதியோா் குறித்த பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். முதியோரின் உரிமையை நிலைநாட்டுவதற்கும், அவா்களைக் குற்றங்களில் இருந்து காப்பாற்றுவதற்கும் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாப்புச் சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், முதியவா்களின் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
முதியோா் நலனை காக்கும் கடமை அரசின் கைகளில் மட்டும் இல்லை, ஓட்டு மொத்த சமூகத்தின் கைகளிலும் உள்ளது. முதியோா் அவமதிக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் ஒரு சமூகத்தின் இழிநிலையையே எடுத்துக்காட்டுகிறது.இதை உணா்ந்தாவது ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் உள்ள பெற்றோருக்கும், முதியவா்களுக்கும் உரிய மதிப்பையும், சுதந்திரத்தையும் வழங்க வேண்டும் என்பதே முதியோா் நல ஆா்வலா்களின் வலியுறுத்தலாக உள்ளது.
2019-ஆம் ஆண்டு அதிகரித்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை பட்டியலாக சதவீதத்தில்...
குற்றங்கள் உயா்வு (சதவீதத்தில்)
* சைபா் குற்றங்கள் 63.5
* பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 26.5
* முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள் 13.7
* காணாமல் சென்றவா்கள் வழக்குகள் 9.5
* காணாமல் சென்ற குழந்தைகள் வழக்குகள் 8.9
* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3
* தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 7.3
* பொருளாதாரக் குற்றங்கள் 6.1
* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5
* லஞ்ச வழக்குகள் 2.8
* குழந்தைகள் தொடா்புடைய குற்றங்கள் 2.0
மாநிலங்களும்...முதியோருக்கு எதிரான குற்றங்களும்....
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட முக்கியமான மாநிலங்களில் முதியோருக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.
| மாநிலங்கள் | 2017 | 2018 | 2019 |
| தமிழகம் | 2769 | 3162 | 2509 |
| மகாராஷ்டிரம் | 5321 | 5961 | 6163 |
| மத்திய பிரதேசம் | 4761 | 3967 | 4184 |
| குஜராத் | 1099 | 2126 | 4088 |
| ஆந்திரம் | 823 | 1673 | 2430 |
| தெலங்கானா | 1308 | 1062 | 1523 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.