வரலாற்றின் பக்கங்களிலிருந்து: இந்திரா காந்தி கொல்லப்பட்டார்: காவலாளர்களே சுட்டனர்

பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளில் நடந்தது என்ன? 'தினமணி'யின் பக்கங்களிலிருந்து...
கோப்பிலிருந்து
கோப்பிலிருந்து

உலக வரலாற்றிலும்  ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சில பக்கங்கள் மறக்க முடியாதவையாக இடம்பெற்றுவிடும். அந்தச் செய்தியைத் தாங்கிவரும் நாளிதழ்களும் ஆவணங்களாகிவிடும்.

இந்திய வரலாற்றில் அத்தகைய ஒரு நாள்தான் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவருடைய அதிகாரப்பூர்வ வசிப்பிடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நாள்.

இந்திரா காந்தியின் படுகொலையின் தொடர்ச்சியாக நாட்டில் என்னென்னவோ நடந்தன - சீக்கிய மக்களுக்கு எதிரான வன்முறைகள் உள்பட.

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளில் என்னவெல்லாம் நடந்தது, எவ்வாறு நடைபெற்றன? அக். 31 ஆம் தேதி அவர் சுட்டுக்கொல்லப்பட்டார், மறுநாள், நவ. 1 ஆம் தேதி, நாளிதழ்கள் அனைத்தும் தலைப்புச் செய்தியாகத் தாங்கிவந்திருந்தன. 

இந்திரா காந்தியின் படத்துடன் தினமணியின் முதல் பக்கம் முழுவதுமே படுகொலைச் செய்திகள்தான். படங்கள் உடனுக்குடன் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பு இல்லாத காலகட்டம் என்பதால் கோப்புப் படம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அந்தக் காலத்தில் செய்திகளின் தொடர்ச்சியை உள்பக்கங்களில் வெளியிடும் வழக்கம் இருந்ததால் சில செய்திகளின் தொடர்ச்சி உள்பக்கங்களிலும் இடம் பெற்றிருக்கிறது.

அன்றைய தினமணி -  மலர் 51 இதழ் 50, 1.11.1984, வியாழக்கிழமை, 8 பக்கங்கள், விலை 70 பைசா. ஆசிரியர் - ஏ.என். சிவராமன்.

   இந்திரா காந்தி உடல் அருகே ஜெயில்சிங், ராஜீவ் காந்தி  
   இந்திரா காந்தி உடல் அருகே ஜெயில்சிங், ராஜீவ் காந்தி  

இதோ இந்திரா காந்தி படுகொலைச் செய்திகள் தினமணியின் பக்கங்களிலிருந்து, அன்றைய மொழியிலேயே: 

இந்திரா காந்தி கொல்லப்பட்டார்:

காவலாளர்களே சுட்டனர்

பிரதமரின் இல்லத்தில்

நடந்த பயங்கரம்

16 குண்டுகள் உடலைத் துளைத்தன:

ஒரு கொலையாளி சுடப்பட்டு சாவு

புது டில்லி, அக். 31 - பதினாறு வருட காலம் இந்த நாட்டின் பிரதமராக இருந்த 66 வயது இந்திரா காந்தி இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடல் தகனம் சனிக்கிழமை நடைபெறும்.

இந்திரா கொலையுண்டதற்கு சுமார் 5 மணி நேரத்துக்குப் பின்னர் அவரது புதல்வர் ராஜீவ் காந்தி புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

இந்திராவின் இல்லத்தில் காவல் பணியில் அமர்த்தப்பட்டிருந்த 3 காவலர்களே அவரை சுட்டுக் கொன்றனர்.

தனித்தனியான இரு கட்டடங்களைக் கொண்ட தமது இல்லத்தில் இந்திராகாந்தி ஒரு கட்டடத்திலிருந்து புல்வெளி வழியே மறு கட்டடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காம்பவுண்டுக்குள்ளாக புதரில் பதுங்கியிருந்த அக்காவலர்கள் வெளியே வந்து துப்பாக்கிகளால் இந்திராவை நோக்கி சுட்டனர். வயிற்றிலும் மார்பிலும் மொத்தம் 16 குண்டுகள் பாய்ந்தன. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியை அடைந்தபோது அவருக்கு நினைவு இருந்தது. அங்கு குண்டுகளை அகற்ற ஆபரேஷன் செய்யப்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாமல் உயிர் பிரிந்தது. பிற்பகல் 2-30 மணிக்கு உயிர் பிரிந்ததாக தலைமை டாக்டர் சபயா தெரிவித்தார்.

இந்திரா சுடப்பட்டவுடன் பிரதமரின் இல்லத்தில் நிறுத்தப்பட்டுள்ள  இந்திய - திபேத்திய கமாண்டோ படையினர் இந்திராவைச் சுட்ட நபர்களில் ஒருவரை சுட்டுக்கொன்றனர். இரண்டாவது நபர் சுடப்பட்டு காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் விசாரிக்கப்படுவார். மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திராவைச் சுட்டுக் கொன்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பியாந்த் சிங், கான்ஸ்டபிள் சத்வந்த் சிங் ஆகிய இருவரும் திட்டமிட்டு இக்கொலையைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. இருவரும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.

இந்திரா படுகொலை செய்யப்பட்ட செய்தி இன்று பிற்பகல் வாக்கில் நாடு பூராவிலும் [முழுவதும்] காட்டுத் தீபோலப் பரவி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. நாடு பூராவிலும் 12 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.

இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட சமயத்தில் ராஷ்டிரபதி [குடியரசுத் தலைவர்] ஜைல்சிங் வெளிநாட்டில் இருந்தார். இந்திராவின் புதல்வர் ராஜீவ் காந்தி, நிதி மந்திரி பிரணவ முகர்ஜி ஆகியோர் கல்கத்தாவிலும் உள்துறை மந்திரி நரசிம்ம ராவ் ஆந்திராவிலும் இருந்தனர். செய்தி தெரிந்து அனைவரும் டில்லிக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். இந்திரா காந்திக்கு எப்போதும் மிகக் கடுமையான பாதுகாப்பு இருந்து வந்தது. ஆனால் அவரைக் காப்பதற்கான பணியில் நியமிக்கப்பட்டவர்களே அவரது கொலையாளிகளாகினர்.

பிரதமரின் இல்லமானது, ஒரே காம்பவுண்டில் அமைந்த இரு கட்டடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லம்  சப்தர் ஜங் ரோடில் வாசலைக் கொண்டது. இந்த இல்லத்தை அடுத்த கட்டடம் பிரதமரின் அலுவலகமாகும். இது அக்பர் ரோடில் வாசலைக் கொண்டது.

இல்லம் அமைந்த கட்டடத்திலிருந்து அலுவலகக் கட்டடத்துக்குச் செல்வதற்கான வளைவான பாதையில்தான் இந்திரா சுடப்பட்டார். ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்துக்குள்ள தூரம் சுமார் 100 கெஜம். [ஒரு கஜம் என்பது 3 அடி அல்லது 0.9144 மீட்டர்] இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும்.  எனினும் இந்திரா நடந்து செல்வது வழக்கம்.

இந்திரா காலை 8 மணிக்கு தமது அலுவலகக் கட்டடத்துக்குச் சென்றார். இந்திராவைப் பற்றி ஒரு டெலிவிஷன் படம் எடுக்கிற பிரபல வெளிநாட்டுப் படப் பிடிப்பாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் காத்திருந்தார். இந்திரா அலுவலகக் கட்டடத்தில் அவரைச் சந்தித்துவிட்டு காலை 9 மணிக்கு இல்லத்துக்குத் திரும்பிவிட்டுப் பிரதமரின் காரியாலயத்துக்குச் [அலுவலகத்துக்குச்] செல்வதென திட்டமிடப்பட்டிருந்தது.

அக்பர் ரோடில் வாசலைக் கொண்ட அலுவலகத்துக்கு அருகே திறந்தவெளியில் பொதுமக்களைக் காலைவேளையில்  சந்திக்கும் நிகழ்ச்சி புதனன்று ரத்து செய்யப்பட்டிருந்தது.

காத்திருந்த கொலைகாரர்கள்

அலுவலகத்திலிருந்து இந்திரா திறந்த வெளியில் அமைந்த நடைபாதை வழியே தனியே நடந்து சென்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் 2 அல்லது 3 கெஜ தூரத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் தலைமையில் 5 மெய்க்காப்பாளர்கள் வந்துகொண்டிருந்தனர். பிரதமரின் அந்தரங்க செயலர் ஆர்.கே. தவான் அவர்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தார்.

இந்திரா சென்றுகொண்டிருந்த பாதையின் இருபுறங்களிலும்  போகன்வில்லா செடிகள் உயரே இருந்து தொங்கிக் கொண்டிருந்தன. இரு கட்டடங்களுக்கும் நடுவே அமைந்த கேட்டிற்கு அப்பால் இச்செடிகள் அமைந்திருந்தன. பாதையின் வலதுபுறத்தில்  புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பியாந்த் சிங் நின்றுகொண்டிருந்தார். கான்ஸ்டபிள் சத்வந்த் சிங் பாதையின் இடதுபுறத்தில் நின்றுகொண்டிருந்தார். உயரே அமைந்த போகன்வில்லா செடிகளுக்கு  அடியில் இந்திரா நடந்துவந்துகொண்டிருந்தபோது கிட்டத்தட்ட அவரைப் பாராதவாறு அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

அடுத்த சில கணங்களில் என்ன நடந்தது என்பதை பின்னால் வந்துகொண்டிருந்த மெய்க்காப்பாளர்கள் உணருமுன்பாக  அவ்விருவரும் தங்களது கொலைத் திட்டத்தை செயல்படுத்தினர். கான்ஸ்டபிள் சத்வந்த் சிங் ஸ்டென் துப்பாக்கியை  உயரே தூக்கியதை பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் பார்க்கத்தான் செய்தனர். அப்போலீஸ்காரர் வணக்கம் செலுத்துவதாகவே அவர்கள் நினைத்தனர். பியாந்த் சிங் தமது கைத்துப்பாக்கியை உருவி இந்திராவை நோக்கி குறிபார்த்து சுமார் ஒரு கெஜ தூரத்திலிருந்து 5 முறை சுட்டார்.

சரமாரியாக சுட்டார்

சத்வந்த் சிங் அதேசமயத்தில் பாதையின் மறுபுறத்திலிருந்து இந்திராவை நோக்கி சரமாரியாகச் சுட்டார். குண்டுகள் பாய்ந்ததும் இந்திரா  நிலைதடுமாறி கீழே சாய்ந்தார். கான்ஸ்டபிள் சத்வந்த் சிங் ஸ்டென் துப்பாக்கி மூலம் சுமார் 14 குண்டுகளைச் சுட்டார். அவற்றில் 14 குண்டுகள் இந்திராவின் உடலைத் துளைத்தன. இந்திரா கீழே சாய்ந்தபோது அவற்றில் இரு குண்டுகள் முதுகுப்புறமாகப் பாய்ந்து அவரது இருதயத்தைத் துளைத்தன என்று டாக்டர்கள்  பின்னர் கூறினர்.

விதி யாரை விட்டது

இந்திராவின் இல்லத்தில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்துவது கூடாது என்று ரகசியத் துறையின் டைரக்டர் கடந்த ஜூலை வாரக் கடைசியில் இந்திராவிடமே யோசனை தெரிவித்திருந்தார் என்றும் ஆனால் இந்திரா இந்த யோசனையை நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

ரகசியத் துறை அமைப்புகளிடமிருந்து வந்துள்ள பாதகமான தகவல்கள் காரணமாக சீக்கியரை காவல் பணியில் போடக் கூடாது என்று அந்த பீரோவின் [அமைப்பின்]  டைரக்டர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்திரா காந்தி அந்த யோசனையை நிராகரித்து அன்றைய தினமே பைலை திருப்பி அனுப்பினார். "நாம் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்" என்று அவர் அதில் குறிப்பு எழுதியிருந்தார்.

பிறகு அவரிடம் அந்த பைல் மறுபடி அனுப்பப்படவில்லை. எனினும் ரகசியத் துறை பீரோவும் போலீசாரும் தாங்களாகவே இது விஷயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்டனர். ஆனால், இது ஈடேறும் முன்னர் காலம் கடந்து விட்டது.

பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய புலனாய்வு பிரிவினர் முன் காப்பு எச்சரிக்கை செய்திருந்ததாகவும் அதை யடுத்து இந்திரா புதன் கிழமை கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆடை பூராவும் ரத்தம்

இந்திராவை நோக்கி கொலையாளிகள் சுட்டதும் பீறிட்டு அலறல் சத்தம் கேட்டது. இந்திரா கீழே சுருண்டு விழுந்தார். அவரது ஆடைகள் பூராவும் ரத்தம் தோய்ந்ததாகின.

மெய்க்காப்பாளர்கள் உடனே இரு கொலையாளிகளை நோக்கி சுட்டனர். ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மெய்க்காப்பாளர்கள் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்திராவின் மருமகளான சோனியாவும் ஆர்.கே. தாவனும் இந்திராவை காரில் அவசரமாக அகில இந்திய வைத்திய விஞ்ஞானக் கழகம் [எய்ம்ஸ்] எனப்படும் ஆஸ்பத்திரிக்கு  கொண்டுசென்றனர்.

அங்கு போய்ச் சேர்ந்ததும் ஒரு டாக்டர் முதலில் இந்திராவின் இருதய இயக்கத்தைத் தூண்டிவிட முயற்சித்தார். செயற்கை சுவாசம் அளித்தார்.

உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஆஸ்பத்திரியை அடையும்போதே உயிர் பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் கூறின.

இதயத்திலிருந்து உடலின் பல பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்கிற பிரதான நல்ல ரத்தக் குழாய் (அயோர்ட்டா) குண்டு பாய்ந்து துளைக்கப்பட்டிருந்ததாக ஒரு டாக்டர் கூறினார். உடலில் 16 குண்டுகள் பாய்ந்திருந்தன என்றும் அவை பிரதானமாக அடிவயிற்றுப் பகுதியில் பாய்ந்திருந்தன என்றும் அவர் சொன்னார். நுரையீரலையும் குண்டுகள் துளைத்திருந்தன.

8-வது மாடியில் அமைந்த ஆபரேஷன் அறைக்கு இந்திரா கொண்டு செல்லப்பட்ட சில நிமிஷத்தில் இந்திராவின் உயிரைக் காப்பாற்ற அவரது உடல் பல்வேறு வகையான கருவிகளுடன் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. எனினும், அவற்றுக்கு பலன் தெரியவில்லை.

இந்திரா உயிரிழந்துவிட்டது பற்றி மாலைக்குள்ளாக செய்தி பரவியது. எனினும் மாலை 6 மணிக்குத் தான் அகில இந்திய ரேடியோ இதனை அறிவித்தது.

ராஜீவ்

புது

பிரதமர்

புது டில்லி, அக். 31 - இ. காங். பொதுச் செயலர் ராஜீவ் காந்தி இன்று பிரதமராகப் பதவி ஏற்றார். ராஷ்டிரபதி பவனில் இந்தப் பதவி ஏற்பு வைபவம் நடந்தது.

திருமதி இந்திரா காந்தி இறந்த பின் எட்டு மணி நேரம் கழித்து ராஜீவ் காந்தி பதவியேற்றார்.

பத்து நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மதியம் டில்லி திரும்பிய ராஷ்டிரபதி ஜைல் சிங், ராஜீவ் காந்திக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

அனைத்து காபினெட் மந்திரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மத்ய மந்திரிசபை மற்றும் இ.காங். பார்லிமெண்டரிக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு இந்தப் பதவியேற்பு வைபவம் நடந்தது.

விமான ஓட்டியாக இருந்து பின்னர் அரசியல் வாதியாக மாறிய 40 வயது நிரம்பிய ராஜீவ் காந்தி, 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சிப் பொதுச்செயலாளராக ஆனார்.

1981ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இடைத் தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் அமேதி பார்லிமெண்டரித் தொகுதியிலிருந்து லோகசபைக்குத் [மக்களவைக்குத்] தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 மந்திரிகள்

பிரணவ முகர்ஜி, நரசிம்ம ராவ், சிவசங்கர், பூடாசிங் ஆகிய நான்கு மந்திரிகளும்கூட பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் அசோகா ஹாலில் நடந்தது. லோகசபை சபாநாயகர் [மக்களவைத் தலைவர்] பலராம் ஜாக்கர், ராஜ்யசபைத் [மாநிலங்களவைத்] துணைத் தலைவர் ஷியாம்லால் யாதவ் மற்றும் பல எம்.பி.க்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இன்று பதவிப் பிரமாணம்  செய்துகொண்ட 4 மந்திரிகளும்  திருமதி இந்திரா காந்தியின் மந்திரி சபையில் மந்திரிகளாக இருந்தவர்கள்.

ராஜீவ் காந்திக்கும் அவரது மந்திரி சபை சகாக்களுக்கும் ராஷ்டிரபதி ஜைல்சிங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

துணை ராஷ்டிரபதி வெங்கடராமன், மேற்கு வங்க கவர்னர் உமா சங்கர் தீட்சித், உ.பி. முதல்வர் என்.டி. திவாரி, மகாராஷ்டிர முதல்வர் வசந்த் ராவ் பாட்டீல், ஹரியானா முதல்வர் பஜன்லால் மற்றும் சீனியர் அதிகாரிகள் பதவியேற்புக்கு வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு ஜைல்சிங் பேசுகையில், இந்திய மக்கள் அனைவரும் திருமதி இந்திரா காந்தியை நேசித்ததாகக் கூறினார். இந்தியா முழுவதுமே திருமதி காந்தியைப் புகழ்ந்ததாக அவர் சொன்னார். மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மவுனம் அனுஷ்டிக்குமாறும் அன்னார் காட்டிய பாதையில் நடப்பதற்கு நம் அனைவருக்கும் மன உறுதி தருமாறு கேட்டு பிரார்த்தனை செய்யுமாறும் அங்கு கூடியிருந்தவர்களை ராஷ்டிரபதி கேட்டுக்கொண்டார்.

வெள்ளை நிற குர்தாவும் பைஜாமாவும் அணிந்த ராஜீவ் காந்தி, பிரதமராகப் பதவிஏற்க மெதுவாக நடந்துவந்தபோது, அங்கு அமைதி நிலவியது.

தனது தாத்தாவும் அன்னையும் வகித்த பதவியை ஏற்கும் ராஜீவ், ரிஜிஸ்தரில் கையெழுத்திட்டு ராஷ்டிரபதியுடன் கைகுலுக்கினார். பின்னர் ராஷ்டிரபதி, ராஜிவுக்கும் நான்கு மந்திரிகளுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சில நிமிடம் தங்களிடம் பேசுமாறு ராஜீவ் காந்தியிடம் நிருபர்கள் கேட்டுக்கொண்டபோது மந்திரிசபைக் கூட்டத்திற்குச் செல்வதாகவும் பின்னர் சந்திப்பதாகவும் அவர் சொன்னார்.

தேச மக்களுக்கு

ராஷ்டிரபதி

வேண்டுகோள்

புது டில்லி, அக். 31 - மனிதாபிமானமற்ற முறையில் சில கொலையாளிகளின் கைவரிசையினால் தேச ஸ்திரத் தன்மையைக் குலைத்து விட முடியாது என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டுமாறு நாட்டு மக்களை ராஷ்டிரபதி ஜைல் சிங் கேட்டுக் கொண்டார்.

புதன் இரவு ரேடியோவில் உரை நிகழ்த்திய ஜைல்சிங் நாம் லட்சியங்களுக்கு அணிவகுத்து என்றும் கூறினார்.

10 தின வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு புதனன்று பிற்பகல் டில்லி திரும்பிய ராஷ்டிரபதி தற்போது நாட்டின் ஐக்கியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்த சவால்களை சமாளிக்க கடவுள் நமக்குப் போதிய பலத்தை வழங்குவார் என்றும் கூறினார்.

நேரு குடும்பத்துடன் தமக்கு 40 வருஷ காலமாக இருந்த தொடர்பு பற்றி ராஷ்டிரபதி  குறிப்பிட்டார்.

ராஜிவ் உரை

ராஜீவ் காந்தி இன்று இரவு ரேடியோவில் உரை நிகழ்த்துவதாக இருந்தார். ஆனால், இரவு 11.15 நிமிடம் வரை அவர் உரை நிகழ்த்தவில்லை.

திட்டம்

போட்டு

கொலை

புது டில்லி, அக். 31 - பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் இருவரும் திட்டமிட்டு தந்திரமாகச் செயல்பட்டு இப்படுகொலையைப் புரிந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இவர்களில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டரின் பெயர் பியாந்த் சிங் (வயது 33). மற்றொருவரான கான்ஸ்டபிளின் பெயர் சத்வந்த் சிங் (வயது 21).

புதன்கிழமை காலையில் பிரதமரை நெருங்கி கொலை திட்டத்தை செயல்படுத்தும் நோக்குடன் அவர்கள் திட்டமிட்டு தங்களது பணி நேரத்தை மாற்றிக் கொண்டனர்

தங்களது கைத்துப்பாக்கி மூலம் இந்திரா மீது குண்டுகளைப் பாய்ச்சிய இன்ஸ்பெக்டர் பியாந்த் சிங் புதனன்று பிற்பகல் 2 மணியிலிருந்துதான் பிரதமர் இல்லத்தில் காவல் பணி மேற்கொள்வதாக இருந்தது.

முற்பகல் காவல் பணியில் இருந்திருக்க வேண்டிய  வேறு சப் இன்ஸ்பெக்டரை பியாந்த் சிங் அணுகி தமக்கு பிற்பகலில் சொந்த வேலைகள் இருப்பதால் தாம் முற்பகல் பணிக்கு வருவதாகக் கூறி அவரை இசைய வைத்தார்.

காவல் பணிக்கென அரசு அளித்த துப்பாக்கியால் சுட்டவரான அவர், சண்டீகர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்.

பிரதமரின் இல்லத்தில் முன்னர் 1974 முதல் 4 ஆண்டுகள் காவல் பணி புரிந்தவரான பியாந்த் சிங், இந்திரா வெளிநாடு சென்றபோதுபல தடவை அவருடன் சென்றிருக்கிறார். பியாந்த் சிங் நார்வேயில் சமீப காலம் வரை இந்தியத் தூதராக இருந்தவரின் உறவினர். கடந்த ஜூனில் அமிருதசரஸ் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்தபோது அந்த இந்திய தூதர் இந்திய அரசைக் கண்டித்து நார்வே நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

மற்றொரு கொலையாளியான சத்வந்த் சிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டில்லி ஆயுத போலீஸ் படையில் சேர்ந்தவர். பிரதமரின் இல்ல வட்டாரத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அவர், பஞ்சாபில் உள்ள குருதாஸ்பூர் நகருக்குச் சென்றுவிட்டு 2 நாள்களுக்கு முன்னர்தான் டில்லி திரும்பினார்.

செய்து முடித்தேன் என கத்தினார்

பிரதமரை நோக்கி அந்த சீக்கிய சப் இன்ஸ்பெக்டர்  சுட்டவுடன் அருகிலிருந்த ஒரு போலீஸ் அதிகாரி அவனிடம் ஏய் என்ன செய்கிறாய்? என்று ஹிந்தியில் கேட்டவுடன் "நான் என்ன செய்ய நினைத்தேனோ அதை செய்து முடித்துவிட்டேன்" என்று அந்த சீக்கிய சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தவுடன் தாமதிக்காமல் அவனை அந்த போலீஸ் அதிகாரி சுட்டு வீழ்த்தினார். மற்றொரு  சீக்கிய போலீஸ்காரனான சத்வந்த் சிங் என்பவனும் பிரதமரை சுட்டான். அவன் சுட்டபோது அவனை நோக்கி இதர போலீஸ்காரர்கள் சுட்டதில் அவன் படுகாயமடைந்தான்.

இப்போது அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறான். அவன் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். குண்டுகாயங்களுக்கு அவனுக்கு ஆபரேஷன் நடைபெற்றது. அவன் பேசும் நிலை அடைந்ததும் அவனை போலீசார் விசாரணை செய்யவிருக்கின்றனர்.

கொல்லப்பட்டதை

நேரில் பார்த்த பெண்

புது டில்லி, அக். 31 - புது டில்லியில் புதன்கிழமையன்று காலை பிரதம மந்திரி இந்திராகாந்தி சுடப்படுவதற்கு முன்பாக அவருடன் வஸந்தி (50)  என்ற சேவாதளத் தொண்டர் நிழல் போலப் பின்தொடர்ந்தார்.

இல்லத்திலிருந்து பிரதமர் வெளியே வந்தார். அப்போது வஸந்தியும் அவருடன் இருந்தார். பிரதமர் மெய்க்காவலர்களைப் பார்த்ததும் அவ்விருவருக்கும் 'வணக்கம்' என்று கைகூப்பினார். பதிலுக்கு அவர்களும் வணக்கம் கூறினார்கள். பிறகு சில வினாடிகள் மௌனம் நிலவியது. உடன் பிரதமரை நோக்கி அவ்விருவரும் சரமாரியாக ஸ்டென் துப்பாக்கியால் சுட்டனர்.

நேரு சமாதி அருகே

சனியன்று தகனகிரியை

புது டில்லி, அக். 31 - படுகொலை செய்யப்பட்ட பிரதமர் இந்திராவின் உடல் டில்லியில் சாந்தி வனத்தில் அவரது தந்தை ஜவஹர்லால் நேருவின் சமாதி அருகே வருகிற சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

நாளை வியாழக்கிழமை காலை 7 மணியிலிருந்து அவரது உடல் தீன் மூர்த்தி இல்லத்தில் மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்.

புதிய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த  புதிய மந்திரி சபையின் முதல் கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

புதன்கிழமை இரவு இந்திராவின் உடல் ஆஸ்பத்திரியிலிருந்து பீரங்கி வண்டியின் மூலம் சப்தர்ஜங் ரோடில் உள்ள  இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை காலையில் அவரது உடல் தீன் மூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை வரை வைக்கப்பட்டிருக்கும்.

எல்லையில்

ராணுவம்

உஷார்

ஸ்ரீநகர், அக். 31 - பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த உடனே காஷ்மீர்ப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீனா  எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரும் இதர காவல் படையினரும் உஷார்ப்படுத்தப்பட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாத ஆதரவாளர்கள் சிலர் இன்று மதியம் ஸ்ரீநகரில் சில இடங்களில் வெடிகளைக் கொளுத்தினர்.

விசேஷ கெஜட்

அறிவிப்பு

புது டில்லி, அக். 31 - இந்தியப் பிரதமர் 1984ம் ஆண்டு அக். 31-ந் தேதி புது டில்லியில் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடன் அரசு அறிவித்தது.

கறுப்புக் கட்டத்துடன் வெளியிடப்பட்ட விசேஷ கெஜட் அறிவிப்பு இதைத் தெரிவிக்கிறது.

உள்துறை அமைச்சகச் செயலர் எம்.எம்.கே. வாலி கையெழுத்திட்டு இந்த விசேஷ கெஜட் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில்

12 நாள்

துக்கம்

சென்னை, அக். 31 - பிரதமர் இந்திராகாந்தி மறைந்ததை ஒட்டி தமிழக அரசு பனிரெண்டு தினங்கள் துக்கம் அனுஷ்டிக்கிறது.

இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கு நடைபெறும் தினமும் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

* * *

இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் பஞ்சாபிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை நகரிலும் பிற நகர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் உள்பட பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாதியிலேயே  சில நிறுத்தப்பட்டன. பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அரசுப் பணியாளர் நேர்முகத் தேர்வுகள், சென்னைப் பல்கலை தேர்வுகள், பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து அடுத்தடுத்த நாள்கள் முழுவதும் இந்திரா காந்தி படுகொலை, தொடர் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளே அதிகளவில் இடம் பெற்றன.

- அக். 31 - இந்திரா காந்தி நினைவு நாள் -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com